Published:Updated:

` பெரிய சுத்தியல், 10 நிமிட தாக்குதல்!'- சிதைக்கப்பட்ட பழைமையான ஈரோடு கோயில் சிலைகள்

பெரிய சுத்தியலுடன் கோயிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள், பத்தே நிமிடங்களில் இரண்டு சிலைகளையும் சுக்குநூறாக உடைத்தெறிந்துவிட்டுச் சென்றுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடைக்கப்பட்ட சாமி சிலைகள்
உடைக்கப்பட்ட சாமி சிலைகள்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே இருக்கிறது, தொப்பபாளையம் கிராமம். இந்தக் கிராமத்தில், குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமான ‘கூரைகுல, விளையன்குல காளியண்ணன்’ என்னும் கோயில் இருக்கிறது. பழைமையான இந்தக் கோயிலில், கடந்த மாதம்தான் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், நேற்றிரவு 2.45 மணியளவில் இந்தக் கோயிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் சிலர், கோயிலினுள் இருந்த கூரைகுல காளியண்ணன் மற்றும் விளையன்குல காளியண்ணன் ஆகிய இரண்டு சாமி சிலைகளையும் உடைத்து நொறுக்கியிருக்கின்றனர். முகமூடி, ஹெல்மெட் சகிதமாக வந்த 8 பேர் கொண்ட மர்ம நபர்கள், பெரிய சுத்தியலை வைத்துப் பத்தே நிமிடத்தில் இரண்டு சிலைகளையும் சுக்குநூறாக நொறுக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

உடைக்கப்பட்ட சாமி சிலை
உடைக்கப்பட்ட சாமி சிலை

சிலை உடைக்கப்பட்ட சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் திரண்டு, அந்த மர்மநபர்களை விரட்டியடித்திருக்கின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், சம்பந்தப்பட்ட மர்மநபர்களைத் தேடிப்பிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறார். நள்ளிரவில் நடந்த சாமி சிலை உடைப்பு சம்பவத்தால் தொப்பபாளையம் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாதென, கோயில் மற்றும் ஊரைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்கள் நுழைந்தது முதல் சிலைகளை உடைத்துவிட்டு வெளியேறியது வரை என அனைத்துக் காட்சிகளும் கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. முகமூடி அணிந்திருந்ததால், மர்மநபர்களின் அடையாளங்களைக் கண்டறிய முடியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் யாரென்பது குறித்துப் போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

குவிக்கப்பட்ட போலீஸார்
குவிக்கப்பட்ட போலீஸார்

தொப்பபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். `` இத்தனை வருடங்களாகக் கூரைகுல காளியண்ணன் மற்றும் விளையன்குல காளியண்ணன் சாமிக்கு இரண்டு கற்களை மட்டுமே வைத்து வழிபட்டுவந்தோம். கடந்த மாதம் தான் கற்களுக்குப் பதிலாக சிலைகளை அமைத்தோம். அவற்றைத்தான் இப்போது உடைத்திருக்கிறார்கள். இந்தக் கோயிலில் எங்களுக்கும் உரிமை இருக்கிறது என இன்னொரு தரப்பினர், கடந்த மாதம் பிரச்னை செய்தனர். ஒருவேளை அவர்கள் இந்தச் சிலைகளை உடைத்திருக்க வாய்ப்பிருக்கிறது” என்கின்றனர் வேதனையோடு.

ஈரோடு தொகுதியின் முன்னாள் எம்.பி செல்வக்குமார் சின்னையன்தான், சிலை உடைக்கப்பட்ட இந்தக் கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக இருக்கிறார்.