Published:Updated:

பண்ணை வீட்டில் கணவன் கொலை; சாக்குமூட்டையில் சடலம் - காதலனுடன் விஷம் அருந்திய நிலையில் மனைவி மீட்பு

கேரள பண்ணை வீடு ஒன்றில், கணவரைக் கொலை செய்து புதைத்து விட்டு தலைமறைவான மனைவியும், அவரது காதலனும் மும்மை லாட்ஜில் விஷம் அருந்திய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

ரிஜோஸ், லிஜி, வாசிம்
ரிஜோஸ், லிஜி, வாசிம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பண்ணைவீடு ஒன்றில், ரிஜோஸ்-லிஜி தம்பதி பணியாற்றிவந்தனர். இந்தத் தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது கணவரைக் காணவில்லை என கடந்த மாதம் 31-ம் தேதி லிஜி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், தனது கணவர் கோழிக்கோடு பகுதியிலிருந்து போன் செய்ததாக லிஜி காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். அந்த எண்ணை ட்ரேஸ் செய்தனர். லிஜியின் செல்போனுக்கு வந்த அழைப்பு, பண்ணைவீட்டின் மேலாளர் வாசிம்மின் நண்பருடையது எனத் தெரியவந்தது. அவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'வாசிம் போன் செய்யச்சொன்னதால் நான் அவ்வாறு செய்தேன்' என வாக்குமூலம் கொடுத்தார்.

போன்
போன்

இதையடுத்து, வாசிம்மிடம் விசாரிப்பதற்காகப் பண்ணைவீட்டுக்குச் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை. வாசிம்மின் சொந்த ஊர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது. இந்தப் பண்ணைவீடும் திருச்சூரைச் சேர்ந்த ஒருவருடையது என்பது விசாரணையில் தெரியவந்தது. வாசிம் தொடர்பாக விசாரிப்பதற்காக, காணாமல் போன ரிஜோஸ் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ரிஜோஸின் மனைவி தனது இரண்டு வயது குழந்தையுடன் தலைமறைவாகிவிட்டார் என்பது தெரியவந்தது.

`பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட கணவன்; மாயமான மனைவி'- கேரள கொலையில் நண்பரால் சிக்கிய மேலாளர்!

காவல் துறையின் விசாரணையில், லிஜி-க்கும் பண்ணைவீட்டின் மேலாளர் வாசிம்முக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரிஜோஸின் வீடு மற்றும் அவர் பணியாற்றிய பண்ணைவீட்டில் சோதனைசெய்தனர். ரிஜோஸின் ஆடைகளை போலீஸார் எடுத்து வந்திருந்தனர். மோப்ப நாயின் உதவியோடு சோதனை செய்தனர். பண்ணை வீட்டின் பின்புறம், புதிதாக மண் தோண்டப்பட்டிருந்த இடத்தில் மோப்ப நாய் படுத்துக்கொண்டது. காவல் துறையினர் அங்கு தோண்டியதில், ஒரு சாக்குப்பை கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பையில் கொலைசெய்யப்பட்ட நிலையில் ரிஜோஸின் சடலம் இருந்தது. உடும்பஞ்சோலை தாசில்தார் முன்னிலையில் ரிஜோஸ் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ரிஜோஸ் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

கொலை
கொலை

இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக வாசிம் சகோதரர் மற்றும் நண்பர்களை போலீஸார் கைதுசெய்தனர். வாசிம் எங்கு தலைமறைவாக இருக்கிறார் என்பது குறித்து விசாரித்தனர். இந்நிலையில், வாட்ஸ்அப் வீடியோ மூலம் வாசிம், போலீஸுக்குத் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “இந்தக் கொலையை நான் மட்டுமே தனியாகச் செய்தேன். இதில் யாருக்கும் தொடர்பு இல்லை. எனவே, என் நண்பர்கள், சகோதரரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்”என அதில் கூறியுள்ளார்.

`துரோகம்.. மரணம்.. பயம்' - 30 வருடங்களாக மணப்பெண் கோலத்தில் வலம்வரும் கூலித் தொழிலாளி!

நவம்பர் 2-ம் தேதி, வாசிம் பண்ணைவீட்டில் குழிதோண்ட வேண்டும் எனக் கூறி ஜே.சி.பி டிரைவரை அழைத்துவந்துள்ளார். தோட்டத்தில் இருந்த மாடு இறந்துவிட்டது. இந்தப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம். எனவே, ஆழமாகப் புதைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஏற்கெனவே, சாக்குப்பையில் கட்டப்பட்டிருந்த ரிஜோஸின் உடலை, மாட்டின் உடல் எனக் கூறி அந்தக் குழியில் போட்டு மூடியுள்ளார். ரிஜோஸ் மாயமானதாக அக்டோபர் 31-ம் தேதி அவரது மனைவி புகார் தெரிவித்திருந்தார். நவம்பர் 2-ம் தேதிதான் உடல் இங்கு புதைக்கப்பட்டுள்ளது. அதுவரை உடலைப் பண்ணைவீட்டில்தான் மறைத்து வைத்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்தனர்.

லிஜி
லிஜி

வாசிம், லிஜி மற்றும் அவரது 2 வயது குழந்தை ஆகியோர் மும்பையில் இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. மும்பை பனவேலியில் உள்ள தங்கும் விடுதியில் மூவரும் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கவில்லை. மதியத்துக்கு மேல் அந்த விடுதி ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மூவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதையடுத்து மும்பை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மூவரும் விஷம் அருந்தித் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. 2 வயது குழந்தை இறந்துவிட்டது. லிஜி மற்றும் வாசிம் இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. இருவரின் உடல்நிலையும் மோசமானதையடுத்து, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மும்பை போலீஸார் அளித்த தகவலின்பேரில், கேரள தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்னனர்.