Published:Updated:

`பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட கணவன்; மாயமான மனைவி'- கேரள கொலையில் நண்பரால் சிக்கிய மேலாளர்!

கேரள பண்ணை வீட்டில் தொழிலாளியை கொலை செய்து புதைத்து விட்டு தலைமறைவான மேலாளரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கொலை
கொலை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் ரிஜோஸ், லிஜி தம்பதி பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ரிஜோஸ், லிஜி தம்பதி கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு தான் இங்கு பணியில் சேர்ந்துள்ளனர். ரிஜோஸ் அங்கிருந்த கால்நடைகளை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். பண்ணையில் இருக்கும் மற்ற வேலைகளை லிஜி கவனித்து வந்துள்ளார். இந்த பண்ணை வீட்டில் திருச்சூரை சேர்ந்த வாசிம் என்பவர் மேலாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 31-ம் தேதி கணவரை காணவில்லை என லிஜி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

 செல்போன்
செல்போன்

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மாயமான அன்று தன் கணவர் கோழிக்கோடு பகுதியில் இருப்பதாக வேறொரு எண்ணில் இருந்து தொடர்புகொண்டு பேசியதாக போலீஸாரிடம் லிஜி கூறியுள்ளார். லிஜியின் செல்போனுக்கு வந்த அழைப்பு கொண்டு அந்த எண்ணை ட்ரேஸ் செய்தனர். லிஜி சொன்ன அந்த எண் பண்ணை வீட்டின் மேலாளார் வாசிமின் நண்பருடைய எண் என்பது எனத் தெரியவந்தது.

அந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது லிஜி எண்ணுக்கு வாசிம் போன் செய்யச் சொன்னதால் தான் அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் வாசிம், லிஜி இருவரும் தலைமறைவாகினர். இதனையடுத்து லிஜியின் வீடு மற்றும் அவர்கள் பணியாற்றி வந்த பண்ணை வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். லிஜியின் வீட்டில் சோதனை செய்த போது அங்கிருந்து ரிஜோஸ் உடைகளை காவலர்கள் எடுத்து வந்தனர். மோப்ப நாயின் உதவியுடன் பண்ணை வீட்டில் சோதனை செய்தனர். பண்ணை வீட்டின் பின்பகுதியில் ஒரு இடத்தில் மோப்ப நாய் படுத்துக்கொண்டது. இதனையடுத்து அந்த இடத்தை தோண்டும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டனர். அப்போது சாக்குப்பையில் இருந்து ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

`பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட கணவன்; மாயமான மனைவி'- கேரள கொலையில் நண்பரால் சிக்கிய மேலாளர்!

போலீஸாரின் விசாரணையில் அது மாயமான ரிஜோஸ் உடல் என்பது தெரியவந்தது. உடும்பஞ்சோலா தாசில்தார் முன்னிலையில் ரிஜோஸ் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் மருத்து கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் ரிஜோஸ் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வாசிம் சகோதரர் மற்றும் நண்பர்களை போலீஸார் கைது செய்தனர். வாசிம் எங்கு தலைமறைவாக இருக்கிறார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போலீசுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் வாசிம் தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் “இந்த கொலையை நான் மட்டுமே தனியாக செய்தேன் இதில் யாருக்கும் தொடர்பு இல்லை. எனவே என் நண்பர்கள், சகோதரரை தொந்தரவு செய்ய வேண்டாம்” என அதில் கூறியுள்ளார்.

வாசிம்
வாசிம்

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “லிஜி மற்றும் வாசிம் இருவருக்கும் இடையே இருந்த தவறான பழக்கமே இந்த கொலைக்கு காரணம் என தெரிகிறது. ரிஜோஸ், லிஜி இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். லிஜி தனது 2 வயது குழந்தையுடன் மாயமாகியுள்ளார். பண்ணை வீட்டுக்கு ரிஜோஸ் தனது குடும்பத்துடன் பணிக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. இந்நிலையில் லிஜி-க்கும் பண்ணை வீட்டின் மேலாளரான வாசிம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிஜோஸ்-க்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால் அவர் எப்போதும் மது அருந்த மாட்டார். விசேஷ தினங்களில் நண்பர்கள், உறவினர்களுடன் மது அருந்துவார். வாசிமுக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. ஆனாலும் ரிஜோஸுக்கு மதுவாங்க அடிக்கடி பணம் கொடுத்து வந்துள்ளார். இதன்பின் ரிஜோஸ் மதுவுக்கு அடிமையாகிவிட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். ரிஜோஸை அடிக்கடி டவுண் பகுதிக்கு அனுப்பிவிட்டு லிஜி, வாசிம் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் ரிஜோஸுக்கு தெரிய வர மனைவியை கண்டித்ததாகத் தெரிகிறது. இதுவே கொலையில் முடிந்துள்ளது. ரியோஸுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.

கொலை
கொலை

நவம்பர் 2-ம் தேதி வாசிம் பண்ணை வீட்டில் குழி தோண்ட வேண்டும் எனக் கூறி வாசிம் ஜே.சி.பி டிரைவரை அழைத்து வந்துள்ளார். தோட்டத்தில் இருந்த மாடு இறந்துவிட்டது. இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம். எனவே ஆழமாக புதைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஏற்கெனவே சாக்குப்பையில் கட்டப்பட்டிருந்த ரிஜோஸின் உடலை மாட்டின் உடல் எனக் கூறி அந்தக் குழியில் போட்டு மூடியுள்ளார். ரிஜோஸ் மாயமானதாக அக்டோபர் 31-ம் தேதி அவரது மனைவி புகார் தெரிவித்திருந்தார். நவம்பர் 2-ம் தேதி தான் உடல் இங்கு புதைக்கப்பட்டுள்ளது. அதுவரை உடலை வாசிம் பண்ணை வீட்டில் தான் மறைத்து வைத்திருக்க வேண்டும். வாசிம் மற்றும் லிஜியை கைது செய்தால் தான் முழுவிபரமும் தெரியவரும்” என்கின்றனர்.