Published:Updated:

சுற்றி மல்லிகைப்பூச்செடி... நடுவில் கஞ்சா பயிர்!

கஞ்சா பயிர்
பிரீமியம் ஸ்டோரி
கஞ்சா பயிர்

கரூர் தில்லாலங்கடி

சுற்றி மல்லிகைப்பூச்செடி... நடுவில் கஞ்சா பயிர்!

கரூர் தில்லாலங்கடி

Published:Updated:
கஞ்சா பயிர்
பிரீமியம் ஸ்டோரி
கஞ்சா பயிர்

குத்தகைக்கு எடுத்த நிலம் ஒன்றரை ஏக்கரில் கஞ்சா பயிரிட்டு, அதை உற்றுப் பார்ப்பவர்களிடம் ‘இது நவீனரக துவரைச் செடிங்க... ஏன் இப்படி உத்து உத்துப் பாக்கிறீங்க?’ என்று பம்மாத்துக்காட்டிய நபரின் கஞ்சா தோட்டத்தை போலீஸார் கண்டுபிடித்து அழித்திருக்கிறார்கள். ‘‘அம்பு மட்டுமே இவர். இவரை எய்தவர்மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’’ என்று அந்தப் பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் மைலம்பட்டியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். மைலம் பட்டியிலிருந்து மாமரத்துப்பட்டிக்குச் செல்லும் வழியில் இவருக்குச் சொந்தமாக பத்து ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதை தன் உறவினரான நிஜாமுதீன் என்பவரின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு, கும்பகோணத்தில் வசித்துவருகிறார். இந்தப் பத்து ஏக்கரில் மூன்று ஏக்கரை கடவூர் சின்னதேவன்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் குத்தகைக்கு எடுத்து வெள்ளாமை செய்துள்ளார். அதில்தான் மல்லிகைப்பூச்செடிகளுக்கு நடுவில் கஞ்சா செடிகளைப் பயிரிட்டு, காவல்துறையிடம் வசமாகச் சிக்கியுள்ளார்.

கஞ்சா பயிர்
கஞ்சா பயிர்

ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளை, திருச்சி போதைப்பொருள் தடுப்புத் துறை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்தத் துறையின் கூடுதல் டி.எஸ்.பி-யான டோங்கரே பிரவீன் உமேஷ், கரூர் எஸ்.பி-யான பாண்டியராஜன் ஆகியோர் போலீஸ் படையுடன் அங்கு செல்ல, மைலம்பட்டி பரபரப்பானது. கஞ்சா பயிரிட்டிருந்த தோட்டத்துக்குள் மீடியாவோ மக்களோ செல்ல அனுமதிக்கவில்லை. கஞ்சா தோட்டத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டே, கஞ்சா செடிகளை அழித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரெய்டு வந்த நேரத்தில் குத்தகைதாரர் அருணாச்சலம், தோட்டத்தில் இல்லை. அங்கு வேலைபார்க்கும் முருகன், அருணாச்சலத்தின் மாமனார் தங்கவேல் ஆகியோர் மட்டுமே இருந்தனர். அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். ‘பயிரிடப்பட்டுள்ள மொத்த கஞ்சா செடியில், 250 கிலோ அளவுக்கு கஞ்சா இருக்கும். அதன் சந்தைமதிப்பு 12.5 லட்சம் ரூபாய்!’ என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. நிலத்தை அருணாச்சலத்திடம் குத்தகைக்குவிட்ட நிஜாமுதீனிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவிட்டு, அவரை அனுப்பி விட்டனர்.

சுற்றி மல்லிகைப்பூச்செடி... நடுவில் கஞ்சா பயிர்!

இந்த விவகாரம்குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், ‘‘அருணாச்சலம், காங்கிரஸ் கட்சியின் கடவூர் வடக்கு வட்டாரத் தலைவர். நிஜாமுதீன், அ.தி.மு.க பிரமுகர். அருணாச்சலம் குத்தகைக்கு எடுத்து வெள்ளாமை செய்துவரும் தோட்டத்துக்குள் உள்ளூர் ஆட்கள் எவரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், வெளியாட்கள் புழக்கம் மட்டும் அதிகளவில் இருக்கும். அரசல்புரசலாகச் சந்தேகம் எழுந்ததால், அவ்வப்போது உள்ளே எட்டிப் பார்ப்போம். அப்போது, ‘இப்படி ஏன் உத்து உத்துப் பாக்கிறீங்க? நவீனரக துவரைச்செடி போட்டிருக்கிறேன்’ என்று சொல்லி மழுப்புவார் அருணாச்சலம். இப்படி, முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைத்திருக்கிறார்.

அந்தத் தோட்டத்தில் இரண்டு முறை கஞ்சா பயிரிட்டு அறுவடை செய்து, இது மூன்றாவது வெள்ளாமை என்கிறார்கள். இந்தக் கஞ்சாவை தேனி மாவட்டத்தில்தான் விற்பனை செய்வார்களாம். சிறு வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட தகராறில், இந்தக் கஞ்சா தோட்டம் பற்றிய தகவல் போலீஸ் காதுகள் வரை சென்றுள்ளது.

இப்போதுகூட கஞ்சா அளவை காவல் துறையினர் குறைவாகச் சொல்கின்றனர். அருணாச்சலத்தைக் கைப்பாவையாக வைத்துக்கொண்டு நிஜாமுதீன்தான் கஞ்சா வளர்த்ததாகச் சொல்கிறார்கள். பிரச்னை வந்ததும், அருணாச்சலத்தை வழக்கில் கோத்துவிட்டு எஸ்கேப்பாகப் பார்ப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள். நிஜாமுதீனுக்கு எங்கள் ஊரில் நல்லபெயர் இல்லை. நிஜாமுதீனை விசாரணைக்கு அழைத்த போலீஸார், என்ன காரணத்தாலோ அவர்மீது வழக்குப்பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்’’ என்றனர்.

நிஜாமுதீனிடம் விளக்கம் கேட்பதற்காக அவரைத் தேடிச் சென்றோம். ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

சுற்றி மல்லிகைப்பூச்செடி... நடுவில் கஞ்சா பயிர்!

கரூர் மாவட்ட எஸ்.பி-யான பாண்டிய ராஜனிடம் பேசினோம். ‘‘கஞ்சா பயிரிட்டதற்காக இரண்டு பேரை கைதுசெய்துள்ளோம். அருணாச்சலத்தைத் தேடிவருகிறோம். இந்த வழக்கை, போதைத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டோம். நிஜாமுதீனுக்கு இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும், விசாரணையின்போது அவர்மீது தவறு இருந்தால், தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கஞ்சா அளவை சரியாகத்தான் சொல்லியுள்ளோம். ஒன்றரை ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டாலும், 250 கிலோதான் வருமாம்’’ என்றார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் கடவூர் வடக்கு வட்டாரத் தலைவராக இருக்கும் அருணாச்சலத்தை, அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி, கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சின்னசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.