Published:Updated:

தூத்துக்குடி: தொடரும் முயல், மயில் வேட்டை... கண்காணிப்பை தீவிரப்படுத்துமா வனத்துறை?

முயல் வேட்டையில் ஈடுபட்டவர்கள்
முயல் வேட்டையில் ஈடுபட்டவர்கள்

தூத்துக்குடியில் தொடர்ந்து சட்டவிரோதமாக முயல், மயில்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்தால் மட்டுமே இவற்றைக் காக்க முடியும் என்கின்றனர் விவசாயிகள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தார், எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. மக்காச்சோளம், தீவனச்சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, வரகு, திணை ஆகியவை மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் முயல்கள், மயில்கள் இரை தேடி ஆங்காங்கே வந்து செல்கின்றன. இதுதவிர, கோவில்பட்டி அருகிலுள்ள குருமலை வனப் பகுதியிலிருந்து புள்ளி மான்களும் இரைதேடியும், தண்ணீர் தேடியும் வந்து செல்கின்றன.

தோல் உரிக்கப்பட்ட மயில்கள்
தோல் உரிக்கப்பட்ட மயில்கள்

இவற்றைக் குறி வைத்து வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், கயத்தார் பகுதியில் முயல் வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அதேபோல, எட்டயபுரம் பகுதியில் மயில் வேட்டையாடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். கயத்தார் அருகிலுள்ள அய்யனாரூத்து – மானங்காத்தான் பகுதியில் 10 பேர் வேட்டை நாய்கள், கன்னிகள், கம்புகளுடன் பதுங்கி முயல்வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

கோவில்பட்டி வனச்சரகர் சிவராமு தலைமையிலான வனத்துறையினர் அந்த கும்பலை சுற்றிவளைத்து கைது செய்தனர். ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.50,000 அபராதமாக விதிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து முயல்வேட்டைக்குப் பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, எட்டயபுரம் அருகிலுள்ள முத்துலாபுரத்தில் மயில்கள் வேட்டையாடப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து எட்டயபுரம் போலீஸார் அங்கு சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மயில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட மயில்கள்

அப்போது வேட்டையாடப்பட்ட மயில்களுடன் அமர்ந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல், போலீஸாரைப் பார்த்ததும் தப்பியோடிச் சென்றனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பைக்குகளையும், இறந்த நிலையில் கிடந்த 6 மயில்களையும் போலீஸார் பறிமுதல் செய்து விளாத்திகுளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மயில் வேட்டையில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜனிடம் பேசினோம், ``மழை பெய்தா மட்டும்தான் நாங்க விதைப்போம். விதைத்ததில் இருந்து அறுவடை செய்யுற வரைக்கும் மயில், முயல், மான், காட்டுப்பன்றிகளின் தாக்குதலை எதிர் கொள்கிறோம். மழை நல்லாப் பெய்தா மட்டும்தான் மகசூல் பார்க்க முடியும். இதுல, இவற்றின் தாக்குதல்களால் பாதி மகசூலைக்கூட பார்க்க முடியாது. விவசாயத்துக்கு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் பெரும்பாலன விவசாயிகள் இவற்றைக் கொல்வதில்லை.

முயல் வேட்டையில் ஈடுபட்டவர்கள்
முயல் வேட்டையில் ஈடுபட்டவர்கள்

இவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வெடி வெடித்தும், தகரத்தை தட்டியும் விரட்டி வருகிறோம். ஆனால், இறைச்சிக்காக முயல்கள், காட்டுப்பன்றிகள் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. பகல் நேரங்களில் விவசாயிகள், நிலங்களில் இருப்பதால் இரவு நேரங்களில் கன்னிகள் மூலம் வேட்டையாடிச் செல்கின்றனர். மயில்கள் பெரும்பாலும் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதில்லை.

தண்ணீர் தேடியும், வழி தப்பி வரும் மான்களும் சில சமயங்களில் வேட்டையாடப்படுகின்றன. இறைச்சிப் பிரியர்களின் தேவையைப் பூர்த்தி செய்து பணம் பார்க்கும் இது போன்ற கும்பல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற வேட்டைகள் தொடர்ந்தால் இவை அழிவின் விளிம்பிற்குச் செல்லும் நிலை ஏற்படும். வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார். இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் பேசினோம்,

பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்
பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்

``வனப்பகுதியில் இதுபோன்ற வன விலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குறிய குற்றம். வனத்துறை ரோந்துக்குழுவினர் அடிக்கடி ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், வேட்டையாடுதல் போன்ற குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது. வேட்டையாடுவது, அவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்வது போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் குறித்து வனத்துறையினரிடம் தகவல் கூறச் சொல்லியுள்ளோம். வேட்டையாடிவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு