Published:Updated:

3 மாவட்டங்களில் கொடிகட்டிப் பறந்த`பாண்டி ஜூஸ்'!- குறிவைத்து பிடிக்கப்பட்ட சாராய கும்பல்

கே.குணசீலன்
ம.அரவிந்த்

கும்பகோணத்தில் உள்ள வீடு ஒன்றில், ஐஸ் கம்பெனி என்ற பெயரில் கள்ளச்சாராயம் தயாரித்து, பாண்டி ஜூஸ் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட பாக்கெட்டில் அடைத்து, ஜூஸ் எனக் கூறி பல மாதங்களாக விற்பனை செய்துவந்த கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சாராயம்
சாராயம் ( ம.அரவிந்த் )

'ஐஸ் பாக்கெட்டில் சாராயம், கஞ்சா விற்பனை அமோகம். குமுறும் கும்பகோணம்வாசிகள்' என்ற தலைப்பில், இது புனித நகரம். இதைக் கெடுக்கும் வகையில் இங்கு கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும், இதுகுறித்து ஜூனியர் விகடன் இதழில் கடந்த 2018-ம் வருடம் ஜுன் மாதம் செய்தி வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, 'பாண்டி ஜூஸ்' என்ற பெயரில் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்த கும்பலைக் கண்டுபிடித்து போலீஸார் கைதுசெய்துள்ளனர். பொதுமக்களுக்கு எந்த சந்தேகமும் வராத வகையில் செயல்பட்ட கள்ளச்சாராய கும்பலை போலீஸார் கைதுசெய்த தகவல் வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிடிபட்ட கும்பல்
பிடிபட்ட கும்பல்

கும்பகோணம் உதய நகரில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் தயாரித்து, அதை பாண்டி ஜூஸ் என அச்சடிக்கப்பட்ட பாக்கெட்டுகளில் நிரப்பி, 'ஜூஸ்' என்ற பெயரில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டுவருவதாக தாலுகா போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையொட்டி, கடந்த சில தினங்களாக போலீஸார் அந்த வீட்டை ரகசியமாகக் கண்காணித்துள்ளனர். பின்னர், அந்த வீட்டில் உள்ளவர்கள் வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும் உறுதி செய்துகொண்டனர்.

தினமும் அந்த வீட்டுக்கு 2 பெண்கள் மற்றும் 5-க்கும் மேற்பட்ட ஆண்கள் வந்து செல்வதையும், அத்துடன் கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தில் அடிக்கடி மூட்டைகள் ஏற்றிச் செல்வதையும் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அருகில் இருப்பவர்களுக்கு எந்தச் சந்தேகமும் வராத வகையில் கள்ளச்சாராய கும்பல் செயல்பட்டது தெரியவந்தது. ஜூஸ் கம்பெனிதான் செயல்படுகிறது என எல்லோரையும் நம்ப வைக்கும் வகையில் அவர்களின் நடவடிக்கைகள் இருந்துள்ளன. பின்னர், இதுகுறித்து அருகில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அனைவரும், 'அந்த வீட்டில் ஜூஸ் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்' என்றே போலீஸாரிடம் கூறினர். ஒரு சிலர் மட்டும், 'இரவு நேரங்களில் பலர் இந்த வீட்டுக்கு வருவதும் போவதுமாக உள்ளனர். ஏதோ சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது' என்றும் கூறியுள்ளனர்.

சாராயம்
சாராயம்

அதைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, திடீரென போலீஸ் படையினர் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 2 பெண்கள் பாக்கெட்டுகளில் சாராயத்தை ஊற்றி பேக் செய்து கொண்டிருந்தனர். மேலும், 2 ஆண்கள் மற்ற வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர். அவர்கள், போலீஸார் வந்ததைக் கண்டதும் அதிர்ச்சியடைந்ததுடன், செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பின்னர், ஜூஸ் பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருப்பதை எடுத்து முகர்ந்துபார்த்து, அது சாராயம்தான் என உறுதிசெய்து கொண்டனர். பின்னர், இந்தச் செயலில் ஈடுபட்ட மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜ், ரபிக், சாந்தா, செல்வி ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்தனர்.

இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீஸாரிடம் பேசினோம். ``கும்பகோணம் பகுதியில் ஜூஸ் பாக்கெட் எனக் கூறி கள்ளச்சாராயம் விற்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. சாராய பாக்கெட்டுகள் நமக்கு கிடைத்தாலும், அது எங்கு தயாராகிறது எனத் தெரியாமல் இருந்தது. பின்னர், அதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டோம். அப்போது, புதுச்சேரி மாநிலத்திலிருந்து ஸ்பிரிட் எனப்படும் எரிசாராயத்தை வாங்கிவந்து, அதில் தண்ணீரைக் கலந்து கள்ளச்சாராயம் தயார் செய்து, 150 மில்லி, 200 மில்லி என்ற அளவில் பாக்கெட்டுகளில் அடைத்து பேக் செய்து, விற்பனை செய்து வந்த கும்பல் பற்றித் தெரியவந்தது.

பிளாஸ்டிக் கவர்
பிளாஸ்டிக் கவர்

பாண்டி ஜூஸ் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்பனைக்கு அனுப்பிவந்ததால், யாருக்கும் இவர்கள்மீது சந்தேகம் வரவில்லை. மேலும், இதை விற்பனை செய்வதற்கு தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களிலும் ஏஜென்ட்டுகளை நியமித்து செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் சாராயம் தயார் செய்துகொண்டிருக்கும்போதே கொத்தாகப் பிடிக்க வேண்டும் என திட்டம் வகுத்துக் காத்திருந்து, அதன்படி பிடித்துவிட்டோம். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாத காலமாக இதுபோன்று சாராயம் விற்பனை செய்துவந்ததை ஒப்புக்கொண்டனர். இதில் வரும் வருமானத்தை வைத்து, உயர் ரக கார், புல்லட் போன்றவற்றுடன் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 கார், 2 பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கிறோம்.

மேலும், வீட்டுக்குள் இருந்து 40 பேரல் ஸ்பிரிட், மொத்தம் 750 லிட்டருக்கு 2 ஆயிரம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சாராயம், பேக்கிங் செய்வதற்கான மெஷின், அதற்குரிய பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியிருக்கிறோம். மேலும், பலருக்கு இதில் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கு, மதுவிலக்கு பிரிவு போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் நடத்தும் விசாரணையில் இன்னும் பல விஷயங்கள் வெளிவரும். நிச்சயமாக இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. கோயில் நகரத்தின் புனிதத்தைக் காக்கின்ற வகையில் காவல்துறையின் செயல்பாடுகள் இருக்கும்'' என்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் நகரத் தலைவர் கண்ணனிடம் பேசினோம். ``சுவாமி மலை, வளையப்பேட்டை பைபாஸ், பட்டீஸ்வரம், மாதுளம்பேட்டைத் தெரு, திருநாகேஸ்வரம் மற்றும் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 24 மணி நேரமும் தங்கு தடையின்றி கள்ளச்சாராய விற்பனை செய்யப்பட்டுவருவதாகக் கடந்த வருடமே பல புகார்கள் கொடுத்தோம். ஆனால், போலீஸார் தீவிரமான நடவடிக்கையை எடுக்கவில்லை. அதனால், கோயில் நகரத்தின் புனிதம் கெட்டுக் கொண்டே இருந்தது. தற்போது, கள்ளச்சாராய கும்பலைக் கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆறு மாதம்தான் இப்படி விற்கிறார்கள் என்பது தவறு. இது ஒரு புறம் இருந்தாலும், கஞ்சா விற்பனை பல இடங்களில் எந்தச் சிரமும் இல்லாமல் நடக்கிறது. வெளியில் இருந்து இங்கு வந்து கஞ்சா பொட்டலம் வாங்கிச் செல்லும் அளவிற்கு விற்பனை படுஜோராக நடக்கிறது.

விஷ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் கண்ணன்
விஷ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் கண்ணன்

புதுச்சேரி மாநில மதுபானமும் விற்கப்படுகிறது. இதன்மூலம் பலர் செல்வந்தர்களாகவும் மாறியுள்ளனர். காவல்துறையினர் மெத்தனம் காட்டாமல் தீவிரமாக நடவடிக்கை எடுத்தால், இது போன்ற பல கும்பல் பிடிபடும். கோயில் நகரத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை இதன்மூலம் தடுக்க வேண்டும்'' என்றார்.