Published:Updated:

`ஒரு போன்கால்; டோர் டெலிவரி இலவசம்!' - கடலூரில் கொடிகட்டி பறக்கும் கள்ளச் சாராயம் விற்பனை

ஜி.சதாசிவம்

கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் கள்ளச் சாராயம் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. போன் செய்தால் டோர் டெலிவரி இலவசம் என்று கூறி இளைஞர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாராயம் விற்கும் இளைஞர்
சாராயம் விற்கும் இளைஞர்

கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள வள்ளிமதுரம், வடபாதி, பனையாத்தூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்பனை நடந்து வருகிறது. சிறுபாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட மேற்கண்ட கிராமங்களில் கள்ளச் சாராயம் விற்பனை குறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், தற்போது அப்பகுதி இளைஞர்கள் சிலர் தங்களின் இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துக்கொண்டு பாக்கெட் ரூ.60 முதல் ரூ.89 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

கள்ளச் சாராய பாக்கெட்
கள்ளச் சாராய பாக்கெட்

மேலும், போன் செய்தால் தேடி வந்து இரு சக்கர வாகனத்தில் டெலிவரி செய்கின்றனர். தங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவர்களிடம் சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்தனர். பப்ளிக்காகவே இந்த விற்பனை நடந்து வருகிறது. குடிமன்னர்கள் சாலையிலேயே குடித்துவிட்டு அங்கேயே பாக்கெட்டுகளைப் போட்டுவிட்டுச் செல்கின்றனர். இதனால் பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கள்ளச்சாராய விற்பனையை அரசும் காவல்துறையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த சுதந்திர தினத்தில் எஸ்.நாரையூர் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

கள்ளச் சாராயம் விற்பனை
கள்ளச் சாராயம் விற்பனை

இது குறித்து சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் கூறுகையில், "எங்க ஊருக்கு அருகில் உள்ள கிராமங்களில் கள்ளச் சாராயம் பகிரங்கமா விற்கப்படுகிறது. நாங்க பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக்கொண்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலேயே விற்பனை செய்கின்றனர். இன்னும் சில பேர் போன் பண்ணா கொண்டு வந்து தருகின்றனர். காவல் துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.