Published:Updated:

`நான் அப்பாவி; 3 கொலைகள் நான் செய்யவில்லை!'- ஹாஜிப்பூர் கொலையில் கைதான ஸ்ரீநிவாஸ்

போலீஸார் வேண்டுமென்றே என் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர் என ஹாஜிப்பூர் சிறுமிகள் கொலை வழக்கில் கைதான ஸ்ரீநிவாஸ் ரெட்டி கூறியுள்ளார்.

ஸ்ரீநிவாஸ் ரெட்டி
ஸ்ரீநிவாஸ் ரெட்டி

தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீநிவாஸ் ரெட்டி என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஹாஜிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையின்போது பள்ளியில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளுக்குச் சென்றார். பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் விசாரணையில் அந்தக் கிராமத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் சிறுமியைப் பார்த்ததாக கிராம மக்கள் சிலர் கூறியதையடுத்து போலீஸார் அந்தப்பகுதியில் தேடினர். சிறுமியின் புத்தகப்பை அந்தக் கிராமத்தின் பாழடைந்த கிணற்றின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதிக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கிணற்றின் அருகே உள்ள பகுதியில் நாய் வட்டமிட்டதையடுத்து. பாழடைந்த கிணற்றுக்குள் இறங்கிய போலீஸார் அங்கு தோண்ட ஆரம்பித்தனர். காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

பாழடைந்த கிணறு
பாழடைந்த கிணறு

ஹாஜிப்பூரைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ரெட்டிக்குச் சொந்தமான விவசாய நிலத்தில்தான் அந்தப் பாழடைந்த கிணறு இருந்தது. இதையடுத்து, ஸ்ரீநிவாஸிடம் விசாரணை நடத்தினர் காவல்துறையினர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். காவல்துறையினரின் தொடர் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவித்தார். மேலும், இரண்டு பெண்களை கொலை செய்ததாக காவல்துறையினரிடம் கூறியதையடுத்து அந்தக் கிணற்றைத் தோண்டும் பணியில் போலீஸார் இறங்கினர். சாக்குப்பையில் சுற்றி புதைக்கப்பட்டிருந்த நிலையில் இளம்பெண்ணின் எலும்புக்கூடு கிடைத்தது. மேலும், தோண்டியதில் மற்றொரு சிறுமியின் சடலமும் கிடைத்தது. கிணற்றிலிருந்த ஆடைகள், புத்தகப்பை, டிபன் பாக்ஸ் போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

ஸ்ரீநிவாஸ் ரெட்டி மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இவர் சம்பந்தப்பட்டுள்ளார்.

Representation Image
Representation Image

சிறுமிகள் கொலை வழக்கு நல்கொண்டாவில் உள்ள மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீநிவாஸ் ரெட்டி, முதலில் வாராங்கலில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, நல்கொண்டா சிறைக்கு மாற்றப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில் ஸ்ரீநிவாஸ் ரெட்டி சிறுமிகளைக் குறிவைத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்தக் கிராமத்துக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் தனியாகச் செல்லும் சிறுமிகளை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

ஸ்ரீநிவாஸ் ரெட்டியின் ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் போலீஸார் சமர்ப்பித்துள்ளனர். தடயவியல் அறிக்கை, நேரில் கண்ட சாட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது தெலங்கானா காவல்துறை. மேலும் ஸ்ரீநிவாஸ் ரெட்டியின் செல்போனில் ஆபாசப் படங்கள் இருந்ததும், கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படங்களும் இருந்ததாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

Representative Image
Representative Image

இந்த வழக்கில் இறுதிகட்ட விசாரணை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 3-ம் தேதி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஸ்ரீநிவாஸிடம் இருந்து இறுதி அறிக்கை கேட்டிருந்தது. ஸ்ரீநிவாஸ் நீதிமன்றத்தில், ``நான் அப்பாவி எனக்கும் இந்தக் கொலைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. காவல்துறையினர் திட்டமிட்டே இந்த வழக்கில் என்னை சேர்த்துள்ளனர். என் மீதான வழக்கு பொய்யானது, ஹாஜிப்பூரில் நடந்த கொலைகளுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கொலை வழக்கில் உள்ள அனைத்து ஆதாரங்களும் கற்பனையானவை” என்றார்.

பாலியல் தொழிலாளி கொலை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, `அதில் உண்மையில்லை’ என்றார். சரி காவல்துறையினர் ஏன் உன்னை இத்தனை வழக்குகளில் சிக்க வைக்க வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, `எங்கள் நிலத்தின் மீது சிலருக்கு கண் இருந்தது. அவர்கள்தான் போலீஸின் மூலம் என் மீது என் குடும்பத்தினர் மீதும் தேவையில்லாமல் வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளனர்’ என்றார்.

கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்
கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்

`என்னிடம் ஸ்மார்ட்போன்கள் எல்லாம் இல்லை. சாதாரண மொபைல் போன்தான் வைத்துள்ளேன். அதேபோல் எனக்கு பைக் ஓட்டத் தெரியாது. போலீஸார் பீர் பாட்டிலை என்னிடம் கொடுத்து பிடிக்கச் சொன்னார்கள் நான் பிடித்தேன் அதில் என்னுடைய கைரேகை பதிவானது. போலீஸார் வற்புறுத்தி என்னிடம் வாக்குமூலம் பெற்றனர். விசாரணைக்காக போலீஸார் என்னை என்னுடைய பண்ணைக்கு அழைத்துச் செல்லவில்லை. என்னுடைய அப்பா மற்றும் சகோதரனை சாட்சிக்காக அழைத்து வாருங்கள்’ என்றார். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். தனக்குத் தெரியாது என பதிலளித்தார். ஸ்ரீநிவாஸ் ரெட்டி கைதானதையடுத்து அவரது குடும்பத்தினர் ஹாஜிப்பூரை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.