தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னால், அதிமுக கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. அந்த சூழலில், அதிமுக கட்சியில் இரண்டு அணிகள் உருவானது. அந்த சமயத்தில் நடைபெற்ற ஆர். கே நகர் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இதனால், இந்தியத் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

அந்த நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி அணிக்குப் பெற்றுத்தர டி.டி.வி. தினகரன் முயற்சி செய்ததாகவும், சின்னத்தைப் பெறுவதற்கு, பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம் பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டில், டி.டி.வி. தினகரன், சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில் தினகரன், சுகேஷ் என்பவர் யார் என்றே தெரியாது என்றும். அவரிடம் பேசியதே கிடையாது என்றும் தெரிவித்தார். தினகரன், இந்த வழக்கில் ஜாமினில் விடுதலையானார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் சுகேஷ் சந்திரசேகரை, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த மோசடி வழக்கிலும் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷை, ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு நாளை மறுநாள் நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை டி.டி.வி தினகரனுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

வழக்கறிஞர் தற்கொலை:
சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கோபிநாத் (31). டி.டி.வி. தினகரன் சுகேஷிடம் பணம் கொடுத்தபோது கோபிநாத் உடனிருந்ததாகக் கூறப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கோபிநாத்தை நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் தான், கோபிநாத் திருவேற்காட்டில் இருக்கும் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையில் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தவர் வழக்கறிஞர் கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் தற்கொலையில் எந்த சந்தேகமும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.