Published:Updated:

நடிகர் திலீப்புக்கு வில்லனான இயக்குநர் நண்பர்! - நடிகைக்கு பாலியல் தொல்லை வழக்கில் நடப்பது என்ன?

நடிகர் திலீப்
News
நடிகர் திலீப்

திலீப்பிடம் அறிமுகம் ஆனது முதல் அனைத்து விஷயங்களையும் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாகவும், இந்த விஷயங்களை வெளியே கூற காலதாமதம் ஆனதற்கான காரணம் குறித்துக் கூறியிருப்பதாகவும் பாலச்சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2017-ல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பல்சர் சுனி இப்போதும் சிறையில் இருக்கிறார். அதேசமயம் நடிகர் திலீப் 74 நாள்கள் சிறையில் இருந்துவிட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். நடிகையைக் கடத்தியதில் நேரடியாகத் தொடர்புடைய பல்சர் சுனியை தனக்குத் தெரியாது என்று சாதித்துவந்தார் நடிகர் திலீப். திலீப்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் போலீஸாருக்குச் சிக்கவில்லை. நடிகை வழக்கிலிருந்து எப்படியும் தப்பித்துவிடலாம் என மனக்கணக்கு போட்டிருந்தார் திலீப்.

ஆனால் அவரின் நெருங்கிய நண்பராக இருந்த சினிமா இயக்குநர் பாலச்சந்திரகுமார் ரூபத்தில் திலீப்புக்கு எதிரான சாட்சிகள் உருவாகியுள்ளன. 2017-ல் இயக்குநர் பாலச்சந்திரகுமார் திலீப்புக்கு நண்பராகத்தான் இருந்திருக்கிறார். இப்போது திடீரென திலீப்புக்கு எதிரியாக மாறியுள்ளார். நடிகைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனது மனசாட்சி உறுத்துவதால் இதை வெளிப்படுத்துவதாக பாலச்சந்திரகுமார் கூறுகிறார். ஆனால், நடிகை தரப்பிலிருந்து வேண்டுகோள் வந்ததை அடுத்தே பாலச்சந்திரகுமார் திலீப்புக்கு எதிராகத் திரும்பினார் எனவும் சொல்லப்படுகிறது.

சினிமா இயக்குநர் பாலச்சந்திரகுமார்
சினிமா இயக்குநர் பாலச்சந்திரகுமார்

பாலச்சந்திரகுமார் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதுதான் முதன்முதலாக திலீப் குறித்த சில தகவல்களை வெளியிட்டார். "பல்சர் சுனியை தனக்குத் தெரியாது எனக் கூறித்தான் திலீப் ஜாமீன் பெற்றார். ஆனால், திலீப்பும் பல்சர் சுனியும் ஒன்றாக அமர்ந்து பேசியதை நான் பார்த்திருக்கிறேன். திலீப்பின் வீட்டில் வைத்துதான் நான் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தேன். நடிகையைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை ஓர் அதிகாரி திலீப்பிடம் கொண்டுவந்து கொடுத்தார். திலீப் அந்த வீடியோவைப் பார்த்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திலீப் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த சமயத்தில் அவரின் சகோதரன் அனூப், மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் எனக்கு போன் செய்து, பல்சர் சுனியுடனான நட்பு பற்றி வெளியே சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் அவருக்கு ஜாமீன் கிடைக்காது எனக் கேட்டுக்கொண்டனர். ஆலுவா சிறையில் இருந்த திலீப் என்னைப் பார்க்க வேண்டும் எனக் கூறியதாக அவரின் சகோதரர் என்னிடம் சொன்னார். நான் சிறையில் அவரைப் பார்க்கச் சென்ற சமயத்தில் அங்கு திலீப்புக்கு வி.ஐ.பி சலுகை கொடுக்கப்பட்டிருந்தது. `பல்சர் சுனியுடனான தொடர்பு பற்றி வெளியே சொல்லக் கூடாது’ என அப்போதும் திலீப் என்னிடம் கேட்டுக்கொண்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு தன்னைக் கைதுசெய்த போலீஸ் அதிகாரிகளைப் பழிவாங்க வேண்டும் என திலீப் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேசினார்" எனப் பல தகவல்களை வெளிப்படுத்தினார் பாலச்சந்திரகுமார்.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

இதற்கிடையே அதிகாரிகளைப் பழிவாங்கும் நோக்கில் ஆலோசனை நடத்தியதாக திலீப் மீது க்ரைம் பிராஞ்ச் வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாக கோபால கிருஷ்ணன் என்ற திலீப் சேர்க்கப்பட்டுள்ளார். வி.ஐ.பி எனக் கூறப்படும் ஒருவர், ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் யார் எனத் தெரியவில்லை. இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடாது என திலீப் கேரளா ஹை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த கோர்ட் 14-ம் தேதிவரை திலீப்பை கைதுசெய்யத் தடை விதித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் இயக்குநர் பாலச்சந்திரகுமார் நேற்று முன்தினம் க்ரைம் பிராஞ்ச் போலீஸாரிடம் நான்கு மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது 20 டிஜிட்டல் ஆதாரங்களை ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. திலீப் உள்ளிட்டவர்கள் பேசும் ஆடியோவை ஒரு டேப்பில் ரெக்கார்டு செய்து வைத்துள்ளார். அதில் திலீப், திலீப்பின் சகோதரர் அனூப், மனைவியின் தம்பி உள்ளிட்டவர்கள் பேசும் ஆடியோ உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று எர்ணாகுளம் ஜூடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பாலச்சந்திரகுமார் ஆஜராகி ஆறரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலங்கள் 51 பக்கங்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்

திலீப்பிடம் அறிமுகம் ஆனது முதல் அனைத்து விஷயங்களையும் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாகவும், இந்த விஷயங்களை வெளியே கூற காலதாமதம் ஆனதற்கான காரணம் குறித்து வாக்குமூலத்தில் கூறியதாகவும் பாலச்சந்திரகுமார் தெரிவித்துள்ளார். வரும் 20-ம் தேதிக்கு முன்பு முதற்கட்ட விசாரணை அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதால், நடவடிக்கைகள் துரிதகதியில் நடந்துவருகின்றன.