Published:Updated:

`அடையாறு டு காசிமேடு; நடுக்கடலில் வைத்துக் கொலை!' - கோடீஸ்வரர் கொலையில் அகப்பட்ட பெண் வக்கீல்

கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் பிரீத்தா ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகள். திருமணமான அவர் தன் கணவரைப் பிரிந்து தற்போது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

சுரேஷ் பரத்வாஜ்
சுரேஷ் பரத்வாஜ்

சென்னை அடையாறில் தனியாக வசித்துவந்த 50 வயதான சுரேஷ் பரத்வாஜ் என்பவர் கடந்த மாதம் திடீரெனக் காணாமல் போனார். அவர் காணாமல் போனதைத் தொடர்ந்து சுரேஷின் சகோதரர் அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வெறும் காணாமல் போன வழக்காகப் பதிவுசெய்யப்பட்ட இது தொடர் விசாரணையில் கொலைவழக்காக மாறியது.

சுரேஷ் பரத்வாஜ்
சுரேஷ் பரத்வாஜ்

சுரேஷ் காணாமல் போன பிறகு அவரை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் காவலர்கள் இறங்கினர். அவரின் செல்போன் சிக்னல்களை மட்டும் வைத்து முதல் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தது போலீஸ். கைதான காசிமேடு ரவுடி குடுமி பிரகாஷ் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிரவைத்தது. `சுரேஷ் பரத்வாஜுக்கு சென்னையில் இரண்டு, மூன்று வீடுகள் உள்ளன. அவருக்கு உறவினர்கள் பெற்றோர் என யாரும் கிடையாது. அடையாறில் சொகுசு பங்களாவில் தனியாக வாழ்ந்து வந்த சுரேஷின் வீட்டில் ஒரு பெண் மட்டும் வேலை செய்து வந்துள்ளார்.

அந்தப் பெண் தன் குடும்பச் செலவுக்காகவும் பிள்ளைகளின் படிப்புக்காகவும் சிறிது சிறிதாக 4 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார். இந்த நிலையில், சுரேஷ் வேலைக்காரப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அதனால் அந்தப் பெண் சுரேஷ் வீட்டுக்கு வேலைக்குச் செல்லவில்லை. இதையடுத்து வேலைக்காரப் பெண், தன்னிடம் வாங்கிய பணத்தைத் திருப்பி வாங்கித்தரும்படி பிரீத்தா என்ற வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார் சுரேஷ். பிரீத்தாவும் வேலைக்காரப் பெண்ணைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கைதான பெண் வழக்கறிஞர்
கைதான பெண் வழக்கறிஞர்

சுரேஷிடம் வாங்கிய பணத்தை நான் திரும்பத் தருகிறேன் அவர் வீட்டுக்கு மட்டும் வேலைக்குச் செல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார் அந்த வேலைக்காரப் பெண். ஆனால் அதை சுரேஷிடம் கூறாமல் மறைத்துள்ளார் பிரீத்தா. தன்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்துவைக்கும் படி சுரேஷ், வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார். இதற்கும் ஒப்புக்கொண்ட பிரீத்தா அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி தொடர்ந்து சுரேஷிடமிருந்து பணம் வாங்கிவந்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரீத்தாவுக்கு அளித்த வேலைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கடுப்பான சுரேஷ், பிரீத்தாவைச் சந்தித்து ‘ என்னை அந்தப் பெண்ணுடன் சேர்த்துவையுங்கள் அல்லது நீங்கள் என்னிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தாருங்கள்’ எனக் கேட்டுள்ளார்.

`அவள் உன்னுடன் வர சம்மதித்துவிட்டாள்!’ - நம்பிச் சென்ற கோடீஸ்வரர்;  நடுக்கடலில் வைத்து தீர்த்த பெண் வழக்கறிஞர்

வேலைக்காரப் பெண்ணுடன் சேர்த்துவைப்பதாகக் கூறி சுரேஷை காசிமேடு பகுதியிலிருந்து நடுக் கடலுக்கு அழைத்துச் சென்ற பிரீத்தா, தான் சொன்னபடி நடக்காமல் ரவுடி குடுமி பிரகாஷ் உதவியுடன் சுரேஷை படகில் வைத்தே கொடூரமாகக் கொலை செய்து உடலைக் கடலில் வீசியுள்ளார். இதையடுத்து போலீஸ் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள் என அறிந்த பிரீத்தா தலைமறைவாகியுள்ளார். ஆனால் குடுமி பிரகாஷ் போலீஸில் சிக்கிக்கொண்டார்’

கடல்
கடல்

இந்நிலையில் 15 நாள்களுக்கு மேலாகத் தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் பிரீத்தா கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றி நம்மிடம் பேசிய அடையாறு போலீஸ் துணை ஆணையர் பகலவன்,” சுரேஷ் பரத்வாஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் பிரீத்தாவை கைது செய்துவிட்டோம். அவர் தலைமறைவான பிறகு தொடர்ந்து அவரது வீட்டை நாங்கள் கண்காணித்து வந்தோம். இதுவரை ராமநாதபுரத்துக்கு அருகில் தலைமறைவாக இருந்த பிரீத்தா நேற்று சென்னையில் உள்ள தன் வீட்டுக்கு வந்தார். இதை அறிந்த நாங்கள் உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று பிரீத்தாவை கைது செய்தோம்.

இதே வழக்கில் தொடர்புடைய ஆறு பேரை முன்னதாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். அவர்கள் அளித்த அதே வாக்குமூலத்தைத்தான் தற்போது பிரீத்தாவும் தெரிவித்துள்ளார். பணத்துக்காகத்தான் கொலை செய்தேன் எனத் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பிரீத்தாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்” எனக் கூறினார்.