Published:Updated:

அரக்கோணம்: வீச்சரிவாள், துப்பாக்கியுடன் புகுந்த கும்பல்! - `தீரன்’ பட பாணியில் நள்ளிரவில் கொள்ளை!

தாக்குதல் (சித்திரிக்கப்பட்ட படம்)
News
தாக்குதல் (சித்திரிக்கப்பட்ட படம்)

அரக்கோணம் அருகே `தீரன்’ பட பாணியில் வீட்டுக்குள் புகுந்த கும்பல், நான்கு பேரைத் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திவிட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலிருக்கும் செய்யூர் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்கரன். இவர், தனது தாய் சுதா, பெரியம்மாள் லதா, பாட்டி ரஞ்சிதா ஆகியோருடன் தனது விவசாய நிலத்திலேயே வீடுகட்டி வசித்துவருகிறார். புஷ்கரனின் பெரியம்மாள் மகன் சென்னையில் தங்கி வேலை செய்கிறார். இந்த நிலையில், நள்ளிரவு 12 மணியளவில், புஷ்கரனின் வீட்டுக் கதவை வேகமாக யாரோ தட்டியிருக்கிறார்கள். ‘சென்னையிலிருந்து பெரியம்மாள் மகன்தான் வந்திருக்கிறாரோ?’ என்று நினைத்து கதவைத் திறக்க முயன்றிருக்கிறார்.

அரக்கோணம்
அரக்கோணம்

அப்போது, சிலர் பெரிய வீச்சரிவாளுடன் வெளியில் நிற்பதைப் பார்த்து, உடனே கதவை மூடியிருக்கிறார். அவர் அலறியதில் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த தாய், பெரியம்மாள், பாட்டி ஆகியோரும் பதறியடித்து விழித்துக்கொண்டனர். வெளியிலிருந்த கும்பல் வீச்சரிவாளால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. நான்கு பேரையும் வீச்சரிவாளால் வெட்டியதுடன் நாட்டுத் துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர். இதில் நால்வரும் பலத்த காயமடைந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து, பெண்கள் அணிந்திருந்த கம்மல், செயின், பீரோவிலிருந்த நகைகள் என மொத்தம் 25 பவுன் நகைகளையும், 40,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்த கும்பல், தாங்கள் வந்து சென்ற தடயங்களை மறைப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியைத் தூவியுள்ளனர். மேலும், புஷ்கரன் குடும்பத்தினரை வீச்சரிவாள் முனையில், ‘``நாங்கள் மீண்டும் வருவோம். போலீஸிடம் சொன்னால் கொலை செய்துவிடுவோம்’’ என்று மிரட்டிவிட்டு அவர்களிடமிருந்த செல்போன்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்தவர்
படுகாயமடைந்தவர்

படுகாயமடைந்தவர்கள் ஒருவழியாக அரக்கோணம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து சேர்ந்தனர். மருத்துவமனையிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அரக்கோணம் நகர போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது, மேற்கண்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து, நால்வரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்ட போலீஸார், `தீரன்’ பட பாணியில் கொள்ளையடித்த மர்மநபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.