திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள சத்திய விஜய நகரம் என்கிற எஸ்.வி.நகரம் கிராமத்தில் வசித்துவந்தவர் குணசேகரன். வயது 70. இவரது மனைவி காந்தம்மாள். இந்த தம்பதியருக்கு சிவா, தேவகுமார் என்ற இரண்டு மகன்களும், வனிதா என்ற ஒரு மகளும் உள்ளனர். வனிதா திருமணமாகி பெங்களூருவில் கணவருடன் வசித்துவருகிறார். மூத்த மகன் சிவா அவரின் மனைவியைப் பிரிந்து பெற்றோருடன் தங்கியிருந்தார். இளைய மகன் தேவகுமார் காதல் திருமணம் செய்துகொண்டு அருகிலுள்ள மாம்பாக்கம் கிராமத்தில் தங்கியுள்ளார். இந்த நிலையில், தன் மனைவி காந்தம்மாள் இறந்துவிட ஆதரவாக மூத்த மகன் சிவாவைத் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார் தந்தை குணசேகரன். சமீபத்தில், மூத்த மகன் சிவா பைக்கிலிருந்து கீழே விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் சொல்கிறார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், இளைய மகன் தேவகுமார் அடிக்கடி வீட்டுக்குவந்து தந்தை குணசேகரனை மிரட்டி மது குடிக்கப் பணம் வாங்கிச் சென்றிருக்கிறார். தொடர்ந்து, இன்று காலையும் வேலைக்குச் செல்லாமல் மது குடிக்கப் பணம் கேட்டு தந்தை வீட்டுக்குவந்து தகராறில் ஈடுபட்டிருக்கிறார் தேவகுமார். ‘பணம் இல்லை’ என கூறிய தந்தையை கட்டையால் தாக்கியுள்ளார். தலையில் காயம் ஏற்பட்டதில், சுருண்டு விழுந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து, மகன் தேவகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அக்கம், பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில், ஆரணி தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து முதியவர் குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய தேவகுமாரையும் மாமண்டூர் பேருந்து நிறுத்தம் அருகில் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தச் சம்பவம், ஆரணிப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.