Published:Updated:

திண்டுக்கல்:`கவரிங் நகை பறிப்பு’- பைக்கில் தப்பிய இளைஞர்கள்; வைரல் வீடியோவைக்கொண்டு தேடும் தனிப்படை

கவரிங் நகை பறிப்பு
கவரிங் நகை பறிப்பு

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடமிருந்து கவரிங் நகையை தங்கச் சங்கிலி என நினைத்து பறித்துச் சென்ற 3 இளைஞர்களை காரில் விரட்டிச் சென்று பிடிக்க முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வம். பலசரக்கு கடை நடத்திவரும் இவர், தன் மனைவி செல்வியுடன் திண்டுக்கல்லிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறர். திண்டுக்கல் சாலையில் சிங்காரக்கோட்டை பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

அப்போது பின்னால் காரில் வந்துகொண்டிருந்தவர் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மூன்று இளைஞர்களை விரட்டிப் பிடிக்க முயன்றார்.

தப்பிச் சென்ற மூன்று இளைஞர்கள்
தப்பிச் சென்ற மூன்று இளைஞர்கள்

பின்னே காரில் தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்பதை அறிந்த இளைஞர்கள் திண்டுக்கல் சாலையில் விரைந்து சென்றனர். அப்போது காரில் அவர்களை விரட்டிச் சென்றவர், செல்போனில் அவர்களை வீடியோ எடுத்திருக்கிறார். அதில் நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேரின் முகங்களும் தெளிவாகப் பதிவாகின.

தேனி: நேருக்கு நேர் மோதிய லாரி - ஆம்னி பேருந்து! -இரண்டு ஓட்டுநர்கள் பலி; சிகிச்சையில் 6 பேர்

சினிமாவில் வரும் சேஸிங் காட்சிபோல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற வழிப்பறிக் கொள்ளையர்கள், காரில் விரட்டியவர்களிடம் சிக்காமல் தப்பிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியிருக்கிறது.

இது குறித்து நகையைப் பறிகொடுத்த செல்வி அளித்த புகாரின் பேரில், பட்டிவீரன்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, வீடியோ பதிவின் அடிப்படையில் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

வீடியோ பதிவு
வீடியோ பதிவு

இது குறித்து பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரனிடம் கேட்டபோது, ``வீடியோ எடுத்த நபர் வத்தலக்குண்டு பகுதி திமுக-வைச் சேர்ந்தவர். அவர் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டு தப்பியோடும் நிகழ்வைப் பார்த்துவிட்டு அவர்களை மிகவும் ஜாக்கிரதையாகப் பின்தொடர்ந்திருக்கிறார். அதிக வாகனங்கள் சாலையில் வந்ததைப் பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் பைக்கில் யூடர்ன் அடித்து தப்பித்திருக்கிறார்கள். கவரிங் நகை என்பதை அறியாமல் பறித்துச் சென்றாலும் தவறு தவறுதான். எனவே, பட்டிவீரன்பட்டி காவல் சார்பு-ஆய்வாளர் தலைமையில் அந்த மூன்று இளைஞர்களை பிடிக்க தனிப்படை விரைந்திருக்கிறது. விரைவில் அவர்கள் பிடிபட்டவுடன் வீடியோ பதிவு செய்த நபரை அழைத்து கெளரவிப்போம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு