Published:Updated:

`வீட்டிலே வெடித்திருந்தால்..?!’- செங்கல்பட்டில் செயலிழக்க வைக்கப்பட்ட 104 ராணுவ வெடிகுண்டுகள்

ராமகிருஷ்ணன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் ஏதாவது விபத்து ஏற்பட்டு அங்கே வெடித்திருந்தால் அந்தப்பகுதியே பெரிய பாதிப்புக்குள்ளாகி இருக்கும்.

ராணுவ குண்டுகள் செயலிழப்பு
ராணுவ குண்டுகள் செயலிழப்பு

செங்கல்பட்டு அருகே விவசாயி ஒருவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ராணுவ வெடிகுண்டுகளை நேற்று முருகமங்களம் பகுதியில் காவல்துறையினர் செயலிழக்கச் செய்தனர்.

வெடிகுண்டு செயலிழப்பு
வெடிகுண்டு செயலிழப்பு

செங்கல்பட்டு அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவர் தன்னுடைய வயலிலிருந்து ராணுவ வெடிகுண்டை இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குக் கொண்டு சென்றார். அப்போது தவறி விழுந்து அந்த குண்டு வெடித்ததில் அவருக்கும், அருகிலிருந்த கோவிந்தம்மாள் என்ற பெண்மணிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மறைமலைநகர் காவல்துறையினர் ராமகிருஷ்ணனின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் குவியல் குவியலாய் குண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதில் வெடிக்காத நிலையில் மூன்று ராக்கெட் லாஞ்சர் குண்டுகளும், வெடித்தும் வெடிக்காத ஆபத்தான நிலையில் சில குண்டுகளும் என 104 குண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினார்கள்.

வெடிகுண்டுகள்
வெடிகுண்டுகள்

அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இப்பகுதியில் பயிற்சியின்போது வெடிக்கும் குண்டுகளின் பாகங்கள் அப்பகுதியில் சிதறிக்கிடக்கும். அதைக் கொண்டுவந்து எடைக்குப் போட்டு பணம் வாங்குவதை இப்பகுதியில் உள்ளவர்கள் சிலர் செய்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்போரூர் அருகே கிடைத்த குண்டுகளை வைத்து விளையாடும்போது வெடித்ததில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், அங்கு வெடிக்காத நிலையில் ஒரு குண்டு கண்டெடுக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டது.

தற்போது கிடைத்த குண்டுகளையும் காவல்துறையினர் அதேபோன்ற முறையில் வெடிக்கச் செய்திருக்கிறார்கள். வண்டலூர் அருகே உள்ள முருகம்பாக்கத்தில் உள்ள கல்குவாரி பகுதியில் 8 அடி அகலம், 4 அடி ஆழத்தில் இரண்டு குழிகள் வெட்டப்பட்டன. அதில் பகுதி பகுதியாக 9 முறை 104 வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தனர். பலத்த சத்தத்துடன் அந்தக் குண்டுகள் அனைத்தும் வெடித்துச் சிதறின.

வெடிகுண்டு செயலிழப்பு
வெடிகுண்டு செயலிழப்பு

``ராமகிருஷ்ணன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் ஏதாவது விபத்து ஏற்பட்டு அங்கே வெடித்திருந்தால் அந்தப் பகுதியே பெரிய பாதிப்புக்குள்ளாகி இருக்கும். பக்கத்தில் உள்ள வீடுகளும் தரைமட்டமாகி இருக்கும். நல்லவேளையாக அந்தக் குண்டுகள் கைப்பற்றப்பட்டுவிட்டன. அனுமந்தபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு காவல்துறையினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், ராணுவ அதிகாரிகள் அனுமந்தபுரம் வனப்பகுதியில் வெடிக்காமல் கிடக்கும் வெடிகுண்டுகளைக் கண்டெடுத்து அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலங்களில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியும்“ என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.