Published:Updated:

சென்னை: செல்லமாக வளர்த்த நாயுடன் தற்கொலை செய்த தம்பதி; உருக்கமான கடிதம் சிக்கியது!

தற்கொலை
தற்கொலை

சென்னையில் கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட தம்பதியர் தாங்கள் செல்லமாக வளர்த்த நாயையும் தூக்குப் போட்டு கொன்றிருக்கின்றனர். பின்னர் அவர்கள் எழுதிவைத்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியிருக்கின்றனர்.

சென்னை மந்தைவெளி, ஏ.எம்.கார்டன், சிவராமன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (55). ஆட்டோ டிரைவரான இவர், கார்களை வாங்கி விற்பதிலிருந்து பால் வியாபாரத்திலும் ஈடுபட்டுவந்தார். இவரின் மனைவி சாந்தி (49). இந்தத் தம்பதியருக்குக் குழந்தை இல்லை. அதனால் குழந்தைபோல சாம் என்ற நாயை வளர்த்துவந்தனர். லோகநாதனின் வீட்டுக் கதவு இன்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகமடைந்தனர்.

தற்கொலை செய்துகொண்ட தம்பதி லோகநாதன், சாந்தி
தற்கொலை செய்துகொண்ட தம்பதி லோகநாதன், சாந்தி

இந்தச் சமயத்தில் லோகநாதனின் நண்பர்கள் சிலர் பதற்றத்துடன் லோகநாதனின் வீட்டுக்கு இன்று காலை வந்தனர். அவர்கள், லோகநாதனும் சாந்தியும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தங்களுக்கு மெசேஜ் அனுப்பியிருப்பதாக அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தனர். உடனே கதவை உடைத்து பொதுமக்கள் உள்ளே சென்றனர். அப்போது இரண்டு அறைகளில் லோகநாதனும் சாந்தியும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.6 லட்சம் வட்டி; பறிபோன நிலம்; கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை!

இதையடுத்து, அபிராமபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து வீட்டை போலீஸார் சோதனை செய்தபோது தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர்கள் எழுதிவைத்த கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில், பத்து பைசா வட்டிக்கு பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் 5,07,000 ரூபாய் கடனாக வாங்கியிருப்பதாகவும், சீட்டுப் பணம் 2,21,000 ரூபாய் என்றும், சாந்தியின் தங்கை மாலதியின் வளையல் ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அடகுக் கடையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாய் சாம்
நாய் சாம்

மேலும் `அமுதா, சரவணன் ஆகியோர் சேர்ந்து இந்த வீட்டை விற்று, கடன் கொடுத்த மோகன், கண்ணன், சுபா, ரவி, ரமணி, லோகு ஆகியோருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். மாலதியின் வளையலையும் மீட்டு கொடுத்துவிட வேண்டும். எங்களின் சடலங்களை ஒரே குழுயில் புதைக்க வேண்டும்’ என்றும் கடிதத்தில் எழுதியிருந்தனர். வீட்டை போலீஸார் ஆய்வு செய்தபோது லோகாநாதனும் சாந்தியும் குழந்தைபோல வளர்த்து வந்த சாம் என்ற நாயும் தூக்குப் போட்டிருந்ததைக் கண்டறிந்தனர். நாயையும் போலீஸார் மீட்டனர். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு