Published:Updated:

சென்னை: மணிக்கணக்கில் செல்போனில் பேச்சு; சந்தேகத்தால் மனைவியைக் கொலை செய்த டிரைவர்!

கொலை
கொலை ( representational image )

சென்னையில் மணிக்கணக்கில் செல்போனில் பேசிய மனைவி மீது சந்தேகமடைந்த டிரைவர், அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (21). இவருக்கும் சென்னை கிண்டியைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நித்தியானந்தம் லோடு வேன் டிரைவராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் கிண்டி லேபர் காலனி, ஸ்கூல் ரோடு பகுதியிலுள்ள வீட்டில் குடியிருந்துவந்தனர். புவனேஸ்வரி, அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அதனால் அவர்மீது நித்தியானந்தம் சந்தேகப்பட்டு, அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவந்திருக்கிறார். கடந்த 12.7.2021-ம் தேதி நித்தியானந்தத்துக்கும் புவனேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நித்தியானந்தம் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவி புவனேஸ்வரியைக் குத்தியிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரியுடன் நித்தியானந்தம்
கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரியுடன் நித்தியானந்தம்

இதையடுத்து புவனேஸ்வரியின் சகோதரருக்கு போன் செய்த நித்தியானந்தம், `உன் தங்கையைக் கொலை செய்துவிட்டேன்’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். பிறகு காவல் நிலையத்துக்குச் சென்று விவரத்தைக் கூறி சரணடைந்தார். அதனால் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து நித்தியானந்தம் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``புவனேஸ்வரி, தன்னுடைய அக்காள் கணவருடன் செல்போனில் பேசிவந்திருக்கிறார். அதை நித்தியானந்தம் கண்டித்திருக்கிறார். ஆனால் கேட்கவில்லை. அதனால் ஏற்பட்ட தகராறில்தான் இந்தக் கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. புவனேஸ்வரியின் செல்போன் நம்பரை ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர்.

நித்தியானந்தம், புவனேஸ்வரி
நித்தியானந்தம், புவனேஸ்வரி
சென்னை:`` அவள் என் லவ்வர்; அவளுக்குத் தொல்லை கொடுக்காதே" - இளைஞரைக் கொலை செய்த கும்பல்!

புவனேஸ்வரியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் கண்ணீர்மல்க ஒரு தகவலைத் தெரிவித்திருக்கின்றனர். அது என்னவென்றால், `நித்தியானந்தமும் புவனேஸ்வரியின் சகோதரரும் நண்பர்கள். இருவரும் வெவ்வெறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் நித்தியானந்தம், புவனேஸ்வரியை விரும்பியதால் திருமணம் செய்துகொடுத்தோம். ஆனால் திருமணமான எட்டு மாதங்களிலேயே இப்படிச் செய்துவிட்டானே...’ எனக் கதறி அழுதிருக்கின்றனர்.

மனைவி நீண்ட நேரம் செல்போனில் சிரித்து சிரித்துப் பேசியதால் அவரைக் கொலை செய்து காவல் நிலையத்தில் கணவர் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு