Published:Updated:

சென்னை: திருமணம் தாண்டிய உறவைக் கண்டித்த கணவன் கொலை! - விசாரணையில் மனைவியின் ஆண் நண்பர்!

கொலை
கொலை ( Representational image )

வீட்டின் பால்கனியில் தூங்கிக்கொண்டிருந்த கணவரை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீஸார் கைதுசெய்தனர். செல்போன் மூலம் இந்தக் கொலை துப்பு துலங்கியிருக்கிறது.

சென்னை சைதாப்பேட்டை ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர். இவர், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது. ``நான் மேற்படி முகவரியில் வாடகை வீட்டில் குடியிருந்துவருகிறேன். நான் வசிக்கும் வீட்டின் இரண்டாவது மாடியில் கோதண்டபாணி (36), அவரின் மனைவி நிரோஷா (30) ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குடும்பத்தோடு வசித்துவந்தனர். கோதண்டபாணி, சோழிங்கநல்லூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக வேலை பார்த்துவந்தார். நிரோஷா, தி.நகரிலுள்ள பியூட்டி பார்லரில் வேலை பார்த்துவருகிறார்.

கொலை
கொலை

நிரோஷா வேலை பார்க்கும் பியூட்டி பார்லரின் அருகே டெய்லராக மணிகண்டன் என்பவர் வேலை பார்த்துவருகிறார். இவர், அடிக்கடி நிரோஷா வீட்டுக்கு வந்து செல்வார். மணிகண்டன், நிரோஷா பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகத்துடன் பேசிக்கொள்வார்கள். அதனால் கோதண்டபாணிக்கும் நிரோஷாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும். ஆனால் அதை அந்தத் தெருவில் உள்ளவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். கடந்த மூன்று மாதங்களாக கோண்தண்டபாணி வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கியிருந்தார். 18.6.2021-ம் தேதி காலை 11 மணியளவில் நான் வேலைக்குச் செல்லும்போது, மணிகண்டனும் கோதண்டபாணியும் ஜெயராம் தெருவிலுள்ள காயலான் கடை அருகே வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர்.

19.6.2021-ல் அதிகாலை சுமார் 1:30 மணியளவில் மேல்மாடியிருந்து அலறல் சத்தம் கேட்டது. நான் வீட்டிலிருந்து எட்டிப்பார்த்தபோது மணிகண்டன், வீட்டின் மாடியிலிருந்து குதித்து பஜார் ரோடு பக்கம் ஓடினார். உடனே நான் கோதண்டபாணியின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அவரின் கழுத்து, மார்பு, தாடையில் அரிவாளால் வெட்டிய காயங்கள் இருந்தன. அவரின் அருகில் நிரோஷாவின் மாமனார் தட்சிணாமூர்த்தி, மாமியார் மனோகிரி ஆகியோர் இருந்தனர். உடனே நான் அதிகாலை 1:45 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், 108 ஆம்புலன்ஸுக்கும் போன் செய்து தகவல் தெரிவித்தேன். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து கோதண்டபாணியைப் பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். எனவே, கோதண்டபாணியின் இறப்பின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

``தாயின் தவறான நட்பு;  ஊரடங்கில் டிரைவரைக் கொலை செய்த மகன்" -மாங்காடு பகுதியில் நடந்த கொடூரம்
முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

புகாரின்பேரில், உதவி கமிஷனர் அனந்தராமன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து சைதாப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``கோதண்டபாணி, நிரோஷா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் குடும்பத்தோடு கோடம்பாக்கம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் குடியிருந்தனர். அப்போது டெய்லர் மணிகண்டனுடன் நிரோஷாவுக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து அங்கு வந்த கோதண்டபாணி, மனைவி நிரோஷாவுடன் சண்டைபோட்டிருக்கிறார். பின்னர் குடும்பத்தினர் கோதண்டபாணியைச் சமாதானம் செய்து சைதாப்பேட்டையில் குடியிருக்க ஏற்பாடு செய்தனர். அதன் பிறகும் நிரோஷாவுக்கும் மணிகண்டனுக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு தொடர்ந்திருக்கிறது. அதை கோதண்டபாணி கண்டித்தும் இருவரும் கேட்கவில்லை. இந்தநிலையில் கோதண்டபாணியைக் கொலை செய்ய நிரோஷாவும் மணிகண்டனும் திட்டமிட்டனர்.

கொலை செய்யப்பட்ட கோதண்டபாணியுடன் நிரோஷா
கொலை செய்யப்பட்ட கோதண்டபாணியுடன் நிரோஷா

சம்பவத்தன்று கோதண்டபாணி வீட்டின் பால்கனியில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த மணிகண்டனுக்கு நிரோஷா கதவைத் திறந்துவிட்டிருக்கிறார். பின்னர் எதுவும் நடக்காதுபோல வீட்டுக்குள் சென்று படுத்துக்கொண்டார். வீட்டுக்குள் வந்த மணிகண்டன், தூங்கிக்கொண்டிருந்த கோதண்டபாணியைச் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். பிறகு கோதண்டபாணியை யாரோ கொலை செய்துவிட்டதாக நிரோஷா கதறி அழுதார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்திருக்கின்றனர். உறவினர்களிடமும் நிரோஷா நாடகமாடியிருக்கிறார். நிரோஷா மீது எங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில் அவரிடம் விசாரித்தோம். ஆனால் அவர், கோதண்டபாணியைக் கொலை செய்தது யார் என்று தெரியாது என்று கூறினார். இந்தச் சமயத்தில்தான் நிரோஷாவின் செல்போனை ஆய்வு செய்தபோது மணிகண்டனுடன் அவர் பேசிய தகவல் கிடைத்தது. அதன் பிறகு நிரோஷாவிடம் விசாரித்தபோது மணிகண்டன்தான் கோதண்டபாணியைக் கொலை செய்தார் என்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து நிரோஷாவைக் கைதுசெய்தோம். தலைமறைவாக இருந்த மணிகண்டன் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டார். இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்" என்றனர். ஆண் நண்பருடன் சேர்ந்து, தூங்கிக்கொண்டிருந்த கணவரை அவரின் மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு