Published:Updated:

சென்னை: ரௌடி பினு ஸ்டைலில் பட்டா கத்தியால் கேக்கை வெட்டிய இளைஞர்கள்; வைரல் வீடியோவால் கைது!

கேக்கைக் கத்தியால் வெட்டிய புகாரில் கைதானவர்கள்
கேக்கைக் கத்தியால் வெட்டிய புகாரில் கைதானவர்கள்

சென்னை கண்ணகி நகரில் பட்டா கத்தியால் கேக்கை வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னையில் பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக்கை வெட்டிய பிரபல ரௌடி பினுவையும், அவரின் கூட்டாளிகளையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்துக்குப்பிறகு பட்டா கத்தியால் கேக் வெட்டி, சர்ச்சையில் சிலர் சிக்கினர். ரௌடி பினு ஸ்டைலில் கேக்கை வெட்டிக் கைதுசெய்யப்பட்டவர்களின் பட்டியலில் கண்ணகி நகரைச் சேர்ந்த சுனிலும், அவரின் கூட்டாளிகளும் இடம்பிடித்திருக்கிறார்கள்.

ரௌடி பினு
ரௌடி பினு

சென்னை கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த 6.6.2021-ல் இரவு சில இளைஞர்கள் ஒன்று கூடி சுனில் என்பவரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். அப்போது கேக்கை பட்டா கத்தியால் சுனில் வெட்டியிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வைரலானது.

இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த யாகேஷ்வரன் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ஜான் விக்டர் தலைமையில் போலீஸார் பட்டா கத்தியால் கேக்கை வெட்டியவர்களைத் தேடிவந்தனர். விசாரணையில், அவர்கள் கண்ணகி நகரைச் சேர்ந்த சுனில் (18), நவீன்குமார் என்கிற தொப்பை, அப்பு, தினேஷ், ராஜேஷ், கார்த்திக் என்கிற பீடி ஆகிய ஆறு பேர் எனத் தெரியவந்தது.

 கேக்
கேக்
திண்டுக்கல்: பட்டாகத்தியில் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாட்டம்!- போலீஸ் ரேடாரில் 6 பேர்

இதையடுத்து அவர்களைக் கைதுசெய்து கத்தியைப் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோதமாகக் கூடியது. ஆயுதங்களை வைத்திருத்தல், நோய் பரப்புதல், அரசு உத்தரவை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். பட்டா கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் கண்ணகி நகர்ப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு