Published:Updated:

சென்னை: திருமணப் பரிகார பூஜை; தாலி செயினோடு தலைமறைவான போலிச் சாமியார்கள்!

திருமணப் பரிகார பூஜை எனக் கூறி வயதான தம்பதியரிடம் மோசடி
திருமணப் பரிகார பூஜை எனக் கூறி வயதான தம்பதியரிடம் மோசடி

சென்னையில் வயதான தம்பதியரிடம் திருமண பரிகார பூஜை செய்வதாகக் கூறி இரண்டு சாமியார்கள், தாலி செயின் உட்பட தங்க நகைகள், பணத்தை ஏமாற்றிச் சென்றிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை தாம்பரத்தை அடுத்த பார்வதி நகர் இளங்கோ தெருவில் குடியிருப்பவர் ராமச்சந்திரன் (72). இவரின் மனைவி அவையம்பாள் (65). இந்தத் தம்பதியருக்கு 24 வயதில் மகளும் 32 வயதில் மகனும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகின்றனர். ராமசந்திரனும் அவையம்பாளும் தங்களின் மகனுக்கும் மகளுக்கும் வரன் தேடிவந்தனர். ஆனால், சரியான வரன் அமையவில்லை. அதனால் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என ராமசந்திரனும் அவையம்பாளும் கோயில்களுக்குச் சென்று வந்தனர். திருமணம் நடக்காததால் இருவரும் மனவருத்தத்தில் இருந்துள்ளனர்.

வயதான தம்பதியர்
வயதான தம்பதியர்

இந்தச் சமயத்தில் கடந்த 5.8.2021-ம் தேதி முற்பகல் 11 மணியளவில் ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ராமசந்திரனின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரிடம், தங்களின் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடக்கவில்லை என்று கவலையோடு தம்பதியர் கூறியிருக்கின்றனர். அதைக் கேட்ட இளைஞர், உங்களுக்கு தோஷம் இருக்கிறது; அதனால் பரிகாரம் செய்தால் நீங்கள் நினைத்த காரியம் கைகூடும். ஆசைப்பட்ட மாதிரியே மகனுக்கும் மகளுக்கும் சீக்கிரமே திருமணம் நடந்துவிடும் என்று கூறியிருக்கிறார். ஜோதிடரின் அருள்வாக்கு கேட்ட தம்பதியர் சந்தோஷமடைந்திருக்கின்றனர். அதன் பிறகு வீட்டுக்குள் சென்ற ஜோதிட இளைஞர், சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு ராமசந்திரனும் அவையம்பாளும் சம்மதித்திருக்கின்றனர்.

ஜோதிட இளைஞர், ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துவரச் சொல்லியிருக்கிறார். அதன்படி அவையம்பாள் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அந்த இளைஞரிடம் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிக்கொண்ட ஜோதிடர் வீட்டின் பூஜை அறைக்குள் சென்று ஒரு மணி நேரத்துக்கு மேல் பூஜை செய்திருக்கிறார். அப்போது சொம்பிலிருந்து சிறிய தகடு ஒன்றை எடுத்த ஜோதிட இளைஞர், `உங்களுக்கு யாரோ சூன்யம் வைத்திருக்கிறார்கள். அதனால் பரிகாரம் செய்யவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதனால்தான் உங்கள் மகன், மகளுக்கும் திருமணம் கைகூடவில்லை’ என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமசந்திரனும் அவையம்பாளும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டிருக்கின்றனர்.

பூஜை அறையில் வைக்கப்பட்ட சொம்பு
பூஜை அறையில் வைக்கப்பட்ட சொம்பு

சூனியத்தை நீக்க வேண்டுமென்றால் 25,000 ரூபாய் செலவாகும் என்று அந்த இளைஞர் கூறியிருக்கிறார். உடனே ராமசந்திரனும் அவையம்பாளும் ஜோதிடர் கேட்ட பணத்தைக் கொடுத்திருக்கின்றனர். பணத்தை வாங்கிக்கொண்ட அந்த இளம் ஜோதிடர், மீண்டும் பூஜை அறையில் மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்திருக்கிறார். அதன் பிறகு `சூன்யத்தை எடுத்துவிட்டேன். இனிமேல் நீங்கள் நினைத்தப்படியெல்லாம் நடக்கும்’ என்று கூறிவிட்டு வீட்டிலிருந்து ஜோதிட இளைஞர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அப்போது ராமசந்திரனின் செல்போன் நம்பரையும் அவர் வாங்கிக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து 6.8.2021-ம் தேதி ராமசந்திரனை செல்போனில் தொடர்புகொண்ட ஜோதிட இளைஞர், ``உங்களது தோஷம் முழுமையாகக் கழியவில்லை. முழுமையாகக் கழிய வேண்டுமென்றால் உங்கள் மனைவி அணிந்திருக்கும் தாலி செயினை புளிக்குள் மறைத்துவைத்து பூஜை செய்ய வேண்டும். முழுமையான பரிகாரம் செய்ய திருவண்ணாமலையிலிருந்து சாமியார் ஒருவர் உங்கள் வீட்டுக்கு வருவார்’’ என்று கூறியிருக்கிறார். அதனால் ஜோதிட இளைஞர் கூறியதைப்போல அவையம்பாள், தான் அணிந்திருந்த எட்டு சவரன் தாலி செயின், ஒரு மோதிரம், இரண்டு தங்கக் காசுகள் ஆகியவற்றைப் புளிக்குள் மறைத்துவைத்து தினமும் பூஜை செய்து வந்திருக்கிறார்.

தாலி செயின்
தாலி செயின்

ஜோதிட இளைஞர் கூறியதைப் போல கடந்த 12.8.2021-ம் தேதி சாமியார் ஒருவர் ராமசந்திரனின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர், ஜோதிட இளைஞர் அனுப்பியதாகக் கூறியதும் அவரை மரியாதையுடன் ராமசந்திரனும் அவரின் மனைவியும் வீட்டுக்குள் வரவேற்றிருக்கின்றனர். பின்னர் பூஜைக்காக சொம்பில் தண்ணீர் கொண்டு வரும்படி சாமியார் கூறியிருக்கிறார். உடனே அவையம்பாளும் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அதற்குள் தாலி செயின், தங்க மோதிரம், தங்கக் காசுகளை மறைத்துவைத்த புளியைப் போடும்படி சாமியார் கூறியிருக்கிறார். அதன்படி அவையம்பாளும் செய்திருக்கிறார். அதன் பிறகு அவர்கள் கண்முன்னாலேயே சாமியார் பூஜை செய்திருக்கிறார்.

இதையடுத்து அந்தச் சொம்பை மஞ்சள் நிற துணியால் கட்டிய சாமியார், மூன்று நாள்கள் பூஜையறையில்வைத்து பூஜை செய்யும்படி சொல்லியிருக்கிறார். அவசரப்பட்டு அதை மூன்று நாள்களுக்குள் திறந்துவிட்டால் பூஜை பலிக்காது என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார். அதன்படி ராமசந்திரனும் அவையம்பாளும் சொம்பை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வந்திருக்கின்றனர்.

`செய்வினையை எடுக்காவிட்டால், உன் மகன் உயிருக்கு ஆபத்து!'- பெண்ணை ஏமாற்றிய 3 போலி சாமியார்கள்
புகார்
புகார்

சாமியார் கூறியதைப்போல 15.8.2021- ம் தேதி குளித்து முடித்துவிட்டு சொம்பை மூடிவைத்திருந்த மஞ்சள் துணியை எடுத்துப் பார்த்தார். அப்போது உள்ளே இருந்த புளியையும் தங்க நகைகளும் காணவில்லை. அதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகே போலிச் சாமியார்கள் இருவர் திட்டமிட்டுத் தங்களை ஏமாற்றியதை ராமசந்திரனும் அவையம்பாளும் உணர்ந்தனர். பின்னர் இது குறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு