Published:Updated:

சென்னை: ஏற்றுமதி நிறுவனத்தில் மீட்கப்பட்ட அம்மன் சிலைகள்; 2 ஆண்டுகளில் 40 சிலைகள் மீட்பு!

மீட்கப்பட்ட சிலைகள்
மீட்கப்பட்ட சிலைகள்

சென்னையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் ஏற்றுமதி நிறுவனத்தில் மரக்கலைப் பொருள்களுக்குள் அம்மன் சிலை மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சென்னை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்ப்பாக்கம் ஆராஅமுதன் கார்டனிலுள்ள செல்வா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தில் அதிரடியாக போலீஸார் சோதனை செய்தனர். அப்போது கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் ஏற்றுமதி செய்வதற்காக அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்தின் மேல் மாடியில் மரக்கலைப் பொருள்களுக்கு நடுவே மறைத்துவைக்கப்பட்டிருந்த ஓர் உலோக அம்மன் சிலை, இரண்டு அம்மன் கற்சிலைகள், ஒரு கிருஷ்ணர் ஓவியம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சுப்பிரமணியன் (58) என்பவரை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

 சிலை
சிலை
representational image

இது குறித்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநர் அபய்குமார் சிங் கூறுகையில், ``சென்னையில் சிலைகளை வெளிநாட்டுக்குக் கடத்த முயன்ற சுப்பிரமணியனைக் கைதுசெய்திருக்கிறோம். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் குறித்த தகவல்களைச் சேகரித்துவருகின்றனர். தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார் குறிச்சியிலுள்ள நரசிம்ம நாதர் கோயிலில் 1985-ம் அண்டு ஐந்து சிலைகள் திருடப்பட்டன. இந்த வழக்கில் இரண்டு சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றைத் தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, விக்கரபாண்டியம் எல்லைக்குட்பட்ட விஸ்வநாதர் கோயிலில் திருடப்பட்ட ஆறு சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அந்தச் சிலைகளையும் தமிழகத்துக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

`116 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலைகள்!’ - தஞ்சையில் மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீரசோழபுரம் நாரேஸ்வரர் சிவன் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சிலைகள் தடய அறிவியல் துறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்தச் சிலைகளும் அமெரிக்காவில் உள்ளன. அவற்றையும் தமிழகத்துக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் உடையார்பாளையம் காவல் நிலைய வழக்கு, கும்பகோணம் நீதிமன்றத்திலிருந்து அமெரிக்காவிலுள்ள மேத்யூ என்ற சாட்சியை விசாரணை செய்தது. அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இரண்டு சிலைகள் அமெரிக்காவில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

செய்தி குறிப்பு
செய்தி குறிப்பு

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் கடந்த 2020-ம் ஆண்டு 2021-ம் ஆண்டுகளில் தற்போது வரை 17-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். 40 சிலைகள் மீட்கப்பட்டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 74 தொன்மை வாய்ந்த சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பாண்டிச்சேரியில் ஜீன்பால் ராஜரத்தினம் என்பவரிடமிருந்து மீட்டது. இந்த 74 சிலைகளில் 60 சிலைகள் உலோகத்தால் ஆனவை; 14 சிலைகள் கற்சிலைகள்" என்றார். சிறப்பாகச் செயல்பட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை டி.ஜி.பி சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி அபய்குமார் சிங் ஆகியோர் பாராட்டினர்.

அடுத்த கட்டுரைக்கு