Published:Updated:

சென்னை: நள்ளிரவில் சொகுசு காரில் வந்து ஆடு திருடிய இருவர்! - சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை!

 ஆடுகள்
ஆடுகள்

சென்னையில் சொகுசு காரில் வந்த ஆணும் பெண்ணும் ஆடுகளைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது.

சென்னை கொரட்டூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இந்திரா (56) இவர் தன்னுடைய வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 3-ம் தேதி அதிகாலையில் ஆடுகள் சத்தம் போட்டதால் இந்திரா வெளியில் வந்துபார்த்தார். அப்போது இரண்டு ஆடுகளைக் காணவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த இந்திரா கொரட்டூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளைத் திருடியவர்களைத் தேடி வருகின்றனர்.

ஆடுகள்
ஆடுகள்

சம்பவம் நடந்த இந்திரா வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் ஒரு சொகுசு கார் இந்திராவின் வீட்டின்முன் நிறுத்தப்பட்டு அதிலிருந்து ஆணும் பெண்ணும் இறங்குகின்றனர். பின்னர் அவர்கள் இரண்டு ஆடுகளைத் திருடி காரில் ஏற்றிக்கொண்டு தப்பிச் செல்கின்றனர். அந்தப் பெண் கைக்குழந்தை ஒன்று வைத்திருப்பதும் சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது.

அவர்கள் யார் என போலீஸார் விசாரித்து வருகிறார்கள். ஆடுகளைத் திருடியவர்கள் பொதுமக்களிடமும் போலீஸாரிடமும் சிக்காமலிருக்க குடும்ப செட்அப்பில் காரில் வந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் கணவன் மனைவியா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிசிடிவி
சிசிடிவி
நெல்லை: ஆடு திருடிய கும்பல் மீது போலீஸில் புகார்?! - பார் உரிமையாளர் வெட்டிக் கொலை

சென்னை மற்றும் அதன்சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆடு திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நடிகர் ஒருவர் காரில் ஆடுகளைத் திருடியபோது பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அதைப்போல பைக்கில் கணவன், மனைவியும் ஆடுகளைத் திருடி போலீஸாரிடம் பிடிப்பட்டனர். தற்போது சொகுசு காரில் வந்த ஆணும் பெண்ணும் ஆடுகளைத் திருடிச் சென்றிருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு