Published:Updated:

”மூன்றாவதும் பெண் குழந்தையா?” - கருக்கலைப்பு செய்துகொண்ட இளம்பெண் உயிரிழப்பு; போலி டாக்டர் கைது

கருக்கலைப்பு

பெண் குழந்தை என்பதால் போலி டாக்டர் மூலம் கருக்கலைப்பு செய்த இளம்பெண் ஒருவர், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

”மூன்றாவதும் பெண் குழந்தையா?” - கருக்கலைப்பு செய்துகொண்ட இளம்பெண் உயிரிழப்பு; போலி டாக்டர் கைது

பெண் குழந்தை என்பதால் போலி டாக்டர் மூலம் கருக்கலைப்பு செய்த இளம்பெண் ஒருவர், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கருக்கலைப்பு

கடலூர் மாவட்டம், வேப்பூரையடுத்த கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் – அமுதா தம்பதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார் அமுதா. அதனால் நிராமணி கிராமத்திலுள்ள தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்த அமுதாவுக்கு, நேற்று முன்தினம் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து சிறிது நேரத்தில் மயங்கியும் விழுந்திருக்கிறார். அதனால் பதற்றமடைந்த அவருடைய பெற்றோர், உடனே அமுதாவை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அமுதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டனர்.

கைதுசெய்யப்பட்ட போலி மருத்துவர் வடிவேலு
கைதுசெய்யப்பட்ட போலி மருத்துவர் வடிவேலு

அதையடுத்து அவர் உடல் உடற்கூறாய்வு சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதையடுத்து அமுதாவின் பெற்றோர், அவர் கணவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கருக்கலைப்பு செய்தது காரணமாகவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “அமுதா கர்ப்பமாக இருந்த நிலையில், என்ன குழந்தை என்று இருவரும் தெரிந்துகொள்ள விரும்பியிருக்கின்றனர். அதற்காக ஸ்கேன் மையங்களைத் தேடியிருக்கின்றனர். அப்போதுதான் சின்னசேலத்தை அடுத்த அசகளத்தூரில் இருக்கும் ’ஓம் சக்தி’ என்ற மருந்தகத்தில், கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனச் சட்டவிரோதமாக தெரிவிக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது. அதையடுத்து கடந்த 15-ம் தேதி அந்த மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் அமுதா.

அங்கு அவரைப் பரிசோதித்த மருந்தக உரிமையாளர் வடிவேலு, மூன்று மாத பெண் குழந்தை இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அத்துடன் அந்தக் குழந்தை வேண்டாமென்றால் தானே கருக்கலைப்பு செய்வதாகவும் கூறியிருக்கிறார். அந்தத் தகவலை அப்படியே தன் கணவர் கோவிந்தராஜிடம் கூறியிருக்கிறார். அப்போது, `மூன்றாவதும் பெண் குழந்தையா?’ என்று கேட்ட கோவிந்தராஜ், கருக்கலைப்புக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து கடந்த 17-ம் தேதி காலை அமுதாவுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார் வடிவேலு. அவற்றைச் சாப்பிட்டுவிட்டு தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற அமுதாவுக்கு, நேற்று முன்தினம் கடுமையாக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் வயிற்றுவலியால் துடித்த அவர், சற்றுநேரத்தில் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். மருத்துவம் படிக்காத வடிவேலு, அந்தப் பகுதியில் போலி டாக்டராக வலம்வந்து அனைவருக்கும் சிகிச்சை அளித்திருக்கிறார்.

உயிரிழந்த அமுதா
உயிரிழந்த அமுதா

தவிர சட்டவிரோதமாகக் கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்றும் ஸ்கேன் மூலம் கூறிவந்திருக்கிறார். அதற்காக நடமாடும் ஸ்கேன் மையத்தையே வைத்து நடத்தியிருக்கிறார். நேரில் வந்து ஸ்கேன் செய்யத் தயங்குபவர்களிடம், வாட்ஸ்அப்பில் லொகேஷன் அனுப்பச் சொல்லி இவரே அங்கு சென்று ஸ்கேன் செய்தும் வந்திருக்கிறார். இவர் போலி மருத்துவர் என்று அறியாத அமுதா, இவர் கொடுத்த மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு உயிரிழந்திருக்கிறார். இந்தக் குற்றத்தில் வடிவேலுவுடன் செயல்பட்டது யார் என்பது குறித்து விசாரணை செய்துவருகிறோம்” என்றனர். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக போலீஸாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும், வடிவேலுவின் மருந்தகத்தில் நேற்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது ஊசி, மருந்துகளைத் தவிர்த்து அறுவை சிகிச்சைக் கருவிகளும் அங்கு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அவற்றைக் கைப்பற்றியதுடன், மருந்தகத்துக்கு சீல் வைத்தனர்.