திருப்பத்தூர்: அத்துமீறிய கணவரின் அண்ணன்! - அதிர்ச்சியை ஏற்படுத்திய இளம்பெண் மரணம்

மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண் தன் கணவரின் அண்ணனால் பாலியல் தொல்லைக்கு ஆளானார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த மட்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (40), ராணுவ வீரர். இவரது மனைவி சுப்புலட்சுமி (30). இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த சுப்புலட்சுமி மர்மமான முறையில் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

உறவினர்கள் கொடுத்த தகவலின்பேரில், திருப்பத்தூர் தாலுகா போலீஸார் சுப்புலட்சுமியின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம். ராணுவ வீரர் கோட்டீஸ்வரனின் அண்ணன் சுரேஷ் (44).
இவர், அடிக்கடி குடிபோதையில் சுப்புலட்சுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். சுரேஷின் தவறான நோக்கம் குறித்து தன் பெற்றோரிடமும் சுப்புலட்சுமி கூறி அழுதுள்ளார். சுரேஷை கண்டித்தும் அவர் திருந்தவில்லை என்று கூறப்படுகிறது. ‘‘ராணுவ வீரரான என் மருமகன் அசாமில் பணியில் இருக்கிறார்.

கைக்குழந்தையை தவிக்கவிட்டு என்னுடைய மகள் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை. சுரேஷ்தான் மகளை அடித்து கொலை செய்து தூக்கில் மாட்டியிருப்பான்’’ என்று இறந்த பெண்ணின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிந்த போலீஸார், சுரேஷை கைதுசெய்து சுப்புலட்சுமியின் மரணம் கொலையா.. தற்கொலையா? என்று தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். தாயை இழந்து தவிக்கும் அந்த பிஞ்சு குழந்தையின் நிலை, அனைவரையும் உலுக்கியிருக்கிறது.