Published:Updated:

தனுஷ்கோடி: தண்ணீரில் மூழ்கடித்து சிறுவனைக் கொல்ல முயற்சி! - போதையில் இருந்த பெண் கைது

தனுஷ்கோடி : சிறுவனைக் கொல்ல முயன்ற செல்வராணி.
தனுஷ்கோடி : சிறுவனைக் கொல்ல முயன்ற செல்வராணி. ( உ.பாண்டி )

தனுஷ்கோடி போலீஸார் செல்வராணியின் வீட்டுக் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். உள்ளே தலையிலும் நெற்றியிலும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கியநிலையில் சிறுவன் தாழை ஈஸ்வரன் தண்ணீர் கேனில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தனுஷ்கோடி அருகே குடிபோதையில் 4 வயது சிறுவனைத் தாக்கி, தண்ணீரில் அமுக்கிக் கொலை செய்ய முயன்ற பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தனுஷ்கோடி காவல் நிலையம்.
தனுஷ்கோடி காவல் நிலையம்.
உ.பாண்டி

ராமேஸ்வரம், ராமகிருஷ்ணபுரம் அருகேயுள்ள புதுரோடு சுனாமி காலனியைச் சேர்ந்த மீனவர் ஆறுமுகம். இவரின் மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு தாழை ஈஸ்வரன் என்ற 4 வயது மகன் இருக்கிறான். ஆறுமுகமும் பஞ்சவர்ணமும் தனுஷ்கோடி அருகே ஒத்தப்பட்டி கடற்கரை பகுதியில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் தாழை ஈஸ்வரன், சுனாமி காலனியிலுள்ள ஆறுமுகத்தின் தாய் குப்பச்சி அம்மாளுடன் தங்கியிருக்கிறான். குப்பச்சி அம்மாள் வீட்டினருகே செல்வராணி என்ற 50 வயது பெண் வசித்துவருகிறார். கரைவலை மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் செல்வராணி, மாலை நேரங்களில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மேலும், மது போதை தலைக்கு ஏறியவுடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

சுனாமி காலனி
சுனாமி காலனி
உ.பாண்டி

வழக்கம்போல் நேற்று மாலை அதிக போதையிலிருந்த செல்வராணி, தனது வீட்டைக் கூட்டி குப்பச்சி அம்மாள் வீட்டு வாசலில் குப்பைகளைக் குவித்துள்ளார், இதைப் பார்த்த சிறுவன் தாழை ஈஸ்வரன் தனது பாட்டி குப்பச்சி அம்மாளிடம் இது பற்றிக் கூறியிருக்கிறான். இதனால் ஆத்திரமடைந்த செல்வராணி, அந்தப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை தனது வீட்டுக்குத் தூக்கிச் சென்று சாம்பிராணிக் கரண்டியால் சிறுவனின் தலையின் பின்புறத்தில் தாக்கியிருக்கிறார். வலியால் சிறுவன் துடிக்க, அதைக் கண்டுகொள்ளாத செல்வராணி அரிவாளால் சிறுவனின் முகத்தைக் காயப்படுத்தியிருக்கிறார். இதனால் சிறுவன் அலறி துடித்திருக்கிறான். சிறுவனின் அலறல் சத்தத்தை அடக்க அவன் வாயைப் பொத்தியதுடன், தண்ணீர் நிரம்பியிருந்த பிளாஸ்டிக் கேனில் அவனை அமுக்கிக் கொலை செய்ய முயன்றிருக்கிறார் செல்வராணி.

சிறுவன் தாழை ஈஸ்வரன்
சிறுவன் தாழை ஈஸ்வரன்
உ.பாண்டி

இந்நிலையில் குப்பச்சி அம்மாள், விளையாடிக்கொண்டிருந்த தன் பேரனைக் காணாமல் அக்கம் பக்கத்தில் தேடியிருக்கிறார். ஆனாலும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் சிறுவனைத் தேடிய நிலையில், செல்வராணியின் வீடு அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்தனர். இது குறித்து அருகிலுள்ள தனுஷ்கோடி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்கோடி போலீஸார் செல்வராணியின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே தலையிலும் நெற்றியிலும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில்மயங்கிய நிலையில் சிறுவன் தாழை ஈஸ்வரன் தண்ணீர் கேனில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.

செல்வராணி.
செல்வராணி.
உ.பாண்டி

தனுஷ்கோடி போலீஸார் போதையிலிருந்த செல்வராணியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டதுடன், சிறுவனைத் தாக்கப் பயன்படுத்திய சாம்பிராணிக் கரண்டி மற்றும் அரிவாளைப் பறிமுதல் செய்தனர். போதையின் விளைவால் 4 வயது சிறுவனை பெண் ஒருவர் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு