Published:Updated:

`கொய்யா கட்டை, இரும்புக் குழாய் பேரல்கள், கரிமருந்து' - நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பு; விவசாயி கைது!

திண்டுக்கல் மாவட்டத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை விரட்ட வீட்டில் வைத்து நாட்டுத்துப்பாக்கி தயார் செய்தவரைப் போலீஸார் கைது செய்தனர்.

மலைத்தொடர்களை அதிகம் கொண்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் மலை அடிவாரங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை விரட்டுவதற்காகவும், வேட்டையாடுவதற்காகவும் நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நத்தம் அருகே தவசிமலை, சிறுமலை, மலையூர், செந்துறை, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுத்துப்பாக்கிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் இப்பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

துப்பாக்கி
துப்பாக்கி

இந்த நிலையில், நத்தம் அருகே செந்துறை ஊராட்சிக்குட்பட்ட களத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி(51). விவசாயம் செய்து வரும் இவர் வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனபடிப்படையில், நத்தம் போலீஸார் ஆண்டிச்சாமியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அதில் புதிதாக செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கிகள் மட்டுமில்லாது, துப்பாக்கி செய்தவற்கான கட்டைகள், பேரல்கள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து, நாட்டுத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிப்பதற்கான பொருள்களை பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கியுடன் நள்ளிரவில் வனவிலங்கு வேட்டை; நண்பனின் முதுகை துளைத்த தோட்டா! நீலகிரியில் பயங்கரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடந்துவரும் நிலையில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கிகள் பயன்படுத்துவோரைத் தடுக்க எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என போலீஸாரிடம் விசாரித்தோம். ``இதுவரை நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்து பிடிப்பட்டவர்கள் குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் அல்ல. பெரும்பாலும் விவசாயம் செய்துவருவோர்கள் தான் விழிப்புணர்வின்றியும், லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர். அவர்கள் முக்கியமாகக் கூறும் காரணம் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களை பாழ்படுத்துகிறது என்பதுதான். இதுகுறித்து வனத்துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, உரிய லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஒப்படைத்துவிட்டால், எவ்வித நடவடிக்கையும் இருக்காது என அறிவித்தோம். இதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 நாட்டுத்துப்பாக்கிகள் பெறப்பட்டுள்ளன. தற்போது பிடிப்பட்ட ஆண்டிச்சாமியும் விவசாயிதான். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரின் தாத்தா, அப்பா எனப் பரம்பரையாக நாட்டுத்துப்பாக்கி செய்து வருகிறோம் என்றார். அவருக்கு அது சட்டப்படி தவறு என்பது கூடத் தனக்குத் தெரியாது என்றார். கொய்யா கட்டை, இரும்புகுழாய் பேரல்கள், கரிமருந்து, மருந்து திணிக்கும் கம்பி மற்றும் துப்பாக்கி செய்வதற்கான சாமான்களை வைத்திருந்தார். அவற்றையும் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

சூழலில் ஆர்வலர்களோ,`` திண்டுக்கல் மாவட்டத்தில் தேவாங்கு உள்ளிட்ட அறியவகை வன உயிரினங்கள் அதிகம் இருந்தன. ஆனால் அவை தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன.

பறிமுதல்
பறிமுதல்

வேட்டையில் ஈடுபடுவோர் குற்றத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் அனுதாபத்தைத் தேடிக் கொள்ளவும், பயிர்களை தேசப்படுத்துவதாகக் கூறுகின்றனர். வனம் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்தாலே வனவிலங்குகள் கீழே இறங்காது. எனவே வனத்துறையினரும் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு