Published:Updated:

ரயில் தண்டவாளத்தில் துண்டு துண்டாகக் கிடந்த சடலம்; போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

ரயில்வே தண்டவாளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக், மதுபாட்டில்கள், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திண்டுக்கல் மாவட்டம், செட்டியபட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் செப்டம்பர் 18-ம் தேதி 45 வயதுதக்க ஆண் சடலம் கிடந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி போலீஸாரிடம் புகாரளித்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்திய அம்பாத்துரை போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் இலக்கியா தலைமையிலான போலீஸார் இந்த மரணம் குறித்து விசாரித்தனர்.

ரயில்வே தண்டவாளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக், மதுபாட்டில்கள், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

அம்பாத்துரை போலீஸ்
அம்பாத்துரை போலீஸ்

இதில் உயிரிழந்தவர் ஏ.வெள்ளோடு கோம்பை, பாத்திமா நகரைச் சேர்ந்த ஜெரால்ட் தங்கராஜ் என்பது தெரியவந்தது. மேலும் வளர்ப்பு மகனே தந்தையைக் கொலைசெய்து தண்டவாளத்தில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து கிஷோர் (21), அவரின் நண்பர்கள் ஆறுமுகப்பாண்டி (21), அபிஸ் (19) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். இது குறித்து போலீஸார் விசாரித்தபோது, ஜெரால்ட் தங்கராஜ் மனைவியின் முதல் கணவனுக்கு பிறந்தவர் கிஷோர். தாயாரின் பராமரிப்பிலுள்ள இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.

ஜெரால்ட் தங்கராஜ்
ஜெரால்ட் தங்கராஜ்

ஜெரால்ட் தங்கராஜ் வேலைக்குச் செல்லாமல் கிஷோரின் சம்பளப் பணத்தை அடித்து வாங்குவது மட்டுமில்லாமல், அந்தப் பணத்தில் குடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்டு வந்த கிஷோர் வளர்ப்பு தந்தைமீது வெறுப்பில் இருந்திருக்கிறார். இதற்கிடையில் கிஷோர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து ஜெரால்ட் தங்கராஜைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.

மகன் கொலை வழக்கில் கைதான அம்மா! ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?
கிஷோர்
கிஷோர்

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 18-ம் தேதி செட்டியபட்டியிலிருந்து பூத்தாம்பட்டி செல்லும் வழியில் ஜெரால்ட் தங்கராஜை வரவழைத்து, கட்டையால் அடித்து அருகேயுள்ள தண்டவாளத்தில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். தண்டவாளத்தில் இறந்தநிலையில் கிடந்த ஜெரால்ட் தங்கராஜ் மீது ரயில் ஏறியதால் உடல் துண்டு துண்டாகச் சிதறியிருக்கிறது’’ என்றனர். கொலை செய்து ரயிலில் அடிப்பட்டு இறந்ததாக வழக்கை திசைதிருப்ப முயன்றவர்களைக் கைதுசெய்த போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு