Published:Updated:

திண்டுக்கல்: `க்ளூ'-வாகக் கிடைத்த பைக்; பெண்ணின் தலையைத் துண்டித்த கொலை வழக்கில் திருப்பம்

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், துப்பாகக் கிடைத்த பைக் மூலம் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென்மண்டல அமைப்பாளர் உட்பட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திண்டுக்கல்லில் 2012-ம் ஆண்டு நடந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர் நந்தவனப்பட்டி அருகே வள்ளுவர் நகரைச் சேர்ந்த நிர்மலா. இவர் செப்டம்பர் 22-ம் தேதி மர்ம நபர்களால் தலை துண்டித்துக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்துவருகிறது. இந்தநிலையில், திண்டுக்கல் கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் நடராஜன் (45), சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த பூபாலன் (21), செம்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அய்யனார் (21) ஆகியோரைப் போலீஸார் கைதுசெய்தனர்.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்துக் கொலை! - திண்டுக்கல்லில் அதிர்ச்சி
நிர்மலா
நிர்மலா

துப்பாகக் கிடைத்த பைக்

இந்தக் கொலைச் சம்பவத்தில் போலீஸாருக்குக் கொலையாளிகள் பயன்படுத்திய பைக் மட்டுமே துப்பாகக் கிடைத்தது. கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பியோடிய கொலையாளிகள் செட்டிநாயக்கன்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த நபர் மீது மோதியுள்ளனர். இதில் பைக்கை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். அந்த பைக்கைக் கைப்பற்றிய போலீஸார் பதிவு எண் மூலம் உரிமையாளரான அய்யனாரைப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொலையாளிகளுக்கு, தான் பைக் மட்டுமே கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். மேலும் இந்த வழக்கில் கைதாகியிருக்கும் ஆட்டோ டிரைவரான பூபாலன், கொலையாளிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தப்பிக்க உதவியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சங்கிலி கருப்பு ஆகியோர் கொலையாளிகளாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே கொலை நடந்த அன்றே கொலையாளிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக, போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தனிப்படை போலீஸார் புதுக்கோட்டையில் முகாமிட்டு குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். ஆனால் குற்றவாளிகள் போலீஸார் தங்களை நெருங்குவதற்கு முன்பே நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு