Published:Updated:

சென்னை: அரசியல் பிரபலங்களுடன் செல்ஃபி; ரூ.56 லட்சம் மோசடி! - 4 பேர் சிக்கியது எப்படி?

மோசடிப் புகாரில் கைதான ஜெயபராஜ்
மோசடிப் புகாரில் கைதான ஜெயபராஜ்

கிண்டியிலுள்ள சிறு, குறு தொழில் நிறுவனத்தின் இயக்குநர் பதவிக்கு போலி நியமன ஆர்டரைக் கொடுத்து 56 லட்சம் ரூபாயை வாங்கி மோசடி செய்த நான்கு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை ஆவடி, கோவில்பதாகை வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் முரளி (25). இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடிவருகிறார். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கிருபா நகர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெபராஜ் (58) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். அப்போது ஜெபராஜ், முரளியிடம் கிண்டியில் இயங்கும் குறு, சிறு தொழில் நிறுவனத்தின் துறையில் (MSME – Micro Small Medium Enterprises) வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். ஜெபராஜிடன் விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரைச் சேர்ந்த வெங்கடேசனும் முரளியிடம் நாங்கள் காவல்துறை, மின்வாரியத்தில் பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறோம் எனக் கூறியிருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக அரசியல் பிரமுகர்கள், அரசு உயரதிகாரிகளுடன் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி, போட்டோக்களை காண்பித்திருக்கின்றனர். அதைப் பார்த்த பிறகு முரளி நம்பியிருக்கிறார்.

வெங்கடேசன்
வெங்கடேசன்

இதையடுத்து இருவரும் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு முரளி, 56,60,000 ரூபாயைப் பல தவணைகளில் அனுப்பிவைத்திருக்கிறார். அதன் பிறகு பணி நியமன ஆர்டரை முரளியிடம் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து சந்தோஷமடைந்த முரளி, வேலையில் சேரச் சென்றபோதுதான் அது போலி பணி நியமன ஆர்டர் எனத் தெரியவந்தது. அதன் பிறகே ஜெபராஜும் வெங்கடேசனும் தன்னை ஏமாற்றியதை முரளி உணர்ந்தார். பிறகு அவர்களுக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆஃப் என பதில் வந்தது. அதனால் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் முரளி, புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவின் (Job Racket) இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையிலான போலீஸார், முரளி பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு விவரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஜெபராஜ், வெங்கடேசன், திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி, அண்ணாநகரைச் சேர்ந்த நிர்மல்குமார் (26), விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அய்யாசாமி (56) ஆகியோர் மோசடி செய்தது தெரியவந்தது. இவர்கள் கிண்டியிலுள்ள குறு, சிறு தொழில் நிறுவனத்தில் துறை இயக்குநர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 56,60,000 ரூபாயை பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆர்டரைக் கொடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். இவர்களிடமிருந்து போலி பணி நியமன ஆர்டர்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை;  லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது!'
நிர்மல்குமார்
நிர்மல்குமார்

`அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல அரசியல் பிரமுகர்கள், அரசு உயரதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாகக் கூறி அவர்களுடன் எடுத்த புகைப்படங்களைக் காட்டி ஏமாற்றுபவர்களை நம்பி பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம்’ என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டிருக்கிறார். மேலும், கைதுசெய்யப்பட்ட இவர்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வேறு யாரிடமாவது பணம் வாங்கினார்களா என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

"வேலை கன்ஃபார்ம்; பணத்தை  அனுப்புங்க!"- ரூ.56 லட்சம் மோசடி செய்த குடும்பத்தின் மீது வழக்கு பதிவு!
அடுத்த கட்டுரைக்கு