Election bannerElection banner
Published:Updated:

காஞ்சிபுரம்: கஞ்சா விற்பனை குறித்த தகவல்கள்... தொடர் மிரட்டல்!-வெட்டிக் கொலை செய்யப்பட்ட செய்தியாளர்

செய்தியாளர் கொலை
செய்தியாளர் கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொலைக்காட்சிச் செய்தியாளர் ரௌடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த அதிர்ச்சிச் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பழைய நல்லூர் பகுதியில் வசிப்பவர் மோசஸ் (27). இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நிருபராகப் பணியாற்றிவருகிறார். இவர் நேற்றிரவு 11 மணியளவில் தன் வீட்டு வாசலில் போன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கே பைக்கில் வந்த சில மர்ம நபர்கள், மோசஸை ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள்.

மோசஸின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து அவரின் தந்தை வெளியே வந்திருக்கிறார். அவர் வருவதைக் கண்ட மர்ம நபர்கள், அந்த இடத்திலிருந்து ஆயுதங்களோடு தப்பிச் சென்றுவிட்டனர். பலத்த வெட்டுக் காயங்களோடு மோசஸ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

செய்தியாளர் மோசஸ்
செய்தியாளர் மோசஸ்

மோசஸ், தனது பகுதியில் நடந்துவந்த கஞ்சா விற்பனை மற்றும் நில மோசடிகள் குறித்துத் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டிருக்கிறார். இது குறித்து மோசஸுக்குப் பல முறை மிரட்டல்கள் வந்துள்ளன. அந்த மிரட்டல்கள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், `அந்தப் புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றும், `நடவடிக்கை எடுத்திருந்தால் என் மகனை இழந்திருக்க மாட்டேன்’ என்றும் அவர் தந்தை தெரிவித்திருக்கிறார். `மகனின் மரணத்துக்கு நீதி கிடைக்காமல் உடலை வாங்க மாட்டேன்’ என்று அவர் தந்தை தெரிவித்திருந்தார்.

செய்தியாளரின் உயிரிழப்புக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். மோசஸ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, குரோம்பேட்டை மருத்துவமனை அருகில் 70-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவ ஊழியர்கள், அரசு ஊழியர்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் இருப்பதுபோல, பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கவும் தனிச் சட்டம் இயற்றவும், இறந்த பத்திரிகையாளருக்கு நிவாரணம் மற்றும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிடவும் வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலை
கொலை

செய்தியாளர் மோசஸ் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் மூன்று நபர்களைக் கைதுசெய்திருக்கிறார்கள். மேலும், ரௌடி நவமணி என்பவரைத் தேடிவருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள் காவல்துறையினர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு