Published:Updated:

காரைக்காலில் ஊரடங்கிலும் தடையில்லா மதுபானம்! -கலால்துறை மீது பறக்கும் புகார்கள்

கொரோனா
கொரோனா

கள்ள மது விற்பனையைத் தடுக்க சிறப்புப் படை அமைத்திருக்கிறோம். அதில் கலால் பிரிவைச் சேர்ந்த ஒருவர், காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், வருவாய்த்துறையைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற்றிருப்பார்.

கொரோனா வைரஸ் உயிர்ப் பலியைத் தடுப்பதற்காக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த உடனே கலால் துறை அனைத்து மதுக்கடைகளையும் மூடி முறையாக சீல் வைத்திருக்க வேண்டும்.

ஆனால், காரைக்கால் மாவட்ட கலால் துறை பல முக்கிய மதுபானக் கடைகளுக்கு சீல் வைக்காமல் பல லட்சங்களை லஞ்சமாக பெற்றதாகவும், அதனால் இன்றுவரை பல மடங்கு கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

கொரோனா
கொரோனா

இதுபற்றி புதுவை துணைநிலை ஆளுநருக்கு புகார் அனுப்பியுள்ள சமூக ஆர்வலரை தொடர்புகொண்டு பேசினோம். ``காரைக்கால் பிராகார வீதியில் அமைந்துள்ள தனியார் மதுபானக் கடையின் குடோனைத் திறந்து வைத்து மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தி நகர காவல் நிலைய போலீஸாருக்கு தெரிந்ததும் மடக்கிப் பிடித்துள்ளனர். பிடிபட்ட மதுபானத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நகர காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து மதுபானங்கள் குடோனை கலால் துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதைப்போல கோட்டுச்சேரியை அடுத்த கொண்ணக்காவலியில் உள்ள சாராயக் கடை உரிமையாளரான காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் பிரபு என்பவர், முதல்வர் நாராயணசாமிக்கு வேண்டியவர். இவர் சட்டத்தை மதிக்காமல்,144 ஊரடங்கு உத்தரவை மீறி விற்பனை செய்த கடையில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்தனர். கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் பிரபு மீது சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல் மதுபானம் விற்பனை செய்தவர்கள் மீது டி.ஆர் பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய காவல் நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் கலால்துறை
காரைக்கால் கலால்துறை

காரைக்கால் கலால்துறை எடுக்க வேண்டிய இந்த நடவடிக்கைகளை காவல் துறை எடுத்துள்ளது. இதற்கு காரணம் கலால் துறையில் முக்கிய அதிகாரிகள், அவர்களுக்கு கீழுள்ள தாசில்தார்கள் மற்றும் அலுலர்கள் சொல்வதைக் கேட்டு செயல்படுவதாகக் கூறப்படுகிறது. கலால் துறையில் தொடர்ந்து கடந்த 6,7 ஆண்டுகளாக இதே பதவியில் இருப்பதால் இவர்களின் வசூல் வேட்டைக்கு பஞ்சமே இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

கலால்துறையினர் காரைக்கால் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் இன்ஃபார்மர்களை நியமித்து யார் யாரெல்லாம் சரக்கு, மணல் கடத்துகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு கடத்துபவர்களிடம் பேரம் பேசி மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாகப் பேசப்படுகிறது.

எனவே, இந்த இக்கட்டான நேரத்திலும் மதுபானங்கள் விற்கச் சொல்லி பணம் சம்பாதிக்கும் காரைக்கால் கலால் துறையினர் மீது புதுவை துணைநிலை ஆளுநர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுபற்றி காரைக்கால் கலால் பிரிவு துணை ஆணையர் ஆதர்ஷிடம் விளக்கம் கேட்டோம். ``ஊரடங்கு உத்தரவை மீறி மதுபானங்கள் விற்ற 6 மதுக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்திருக்கிறோம். கள்ள மது விற்பனையை தடுக்க சிறப்புப் படை அமைத்திருக்கிறோம். அதில் கலால் பிரிவைச் சேர்ந்த ஒருவர், காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், வருவாய்த்துறையைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற்றிருப்பார்.

லஞ்சம்
லஞ்சம்

எனவே, மூன்று துறையினரும் சேர்ந்துதான் தற்போது 7 டீம் போட்டு ஒவ்வொரு கடையிலும் உள்ள மதுபானங்களை ஸ்டாக் எடுத்து வருகிறோம். கலால் பிரிவிலுள்ள ஊழியர்கள் யார் மீது புகார் வந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு