Published:Updated:

`உங்க கணவர் இதைக் கொடுக்கச் சொன்னார்!' - மிளகாய்ப்பொடி தூவி நகையைப் பறித்த மர்ம ஆசாமி

 செயின் பறிப்பு
News
செயின் பறிப்பு

'உங்க கணவர் இளநீர், மிளகாய் கொடுத்து வரச் சொன்னார்' என்று மர்ம ஆசாமி ஒருவர் கூறியதை நம்பி கதவைத் திறந்த இளம்பெண்ணின் முகத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவி, ஏழு பவுன் நகையைப் பறித்துச் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலை பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவர், மாயனூர் மின்சாரவாரிய அலுவலகத்தில் உதவி இன்ஜினீயராகப் பணிபுரிந்துவருகிறார். இவரின் மனைவி பிரதீபா (வயது 29). இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், குளித்தலை அருகிலுள்ள அய்யர்மலையிலுள்ள ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்துவருகின்றனர். இந்த நிலையில், வழக்கம்போல் புகழேந்தி வேலைக்குச் சென்றுள்ளார். வீட்டில், தனது குழந்தைகளுடன் பிரதீபா தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடி இவரின் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டின் கதவைத் தட்டி, ``உங்க கணவர் புகழேந்தி இளநீர், மிளகாய் கொடுத்து வரும்படி கூறினார்’’ என்று சொல்லியிருக்கிறார். இதை உண்மை என்று நம்பிய பிரதீபா, வீட்டின் கதவைத் திறந்தார். பின்னர், அந்த மர்ம ஆசாமி தன் கையில் மறைத்துவைத்திருந்த மிளகாய்ப்பொடியை பிரதீபா, இரண்டு மாதக் குழந்தையான நவீன் முகத்தில் வீசியிருக்கிறான்.

குளித்தலை காவல் நிலையம்
குளித்தலை காவல் நிலையம்

அதன் பின்னர், பிரதீபா கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு, மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறான். இதனால், அதிர்ச்சியடைந்த பிரதீபா, குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் குறித்து பிரதீபா அளித்த புகாரின் பேரில் குளித்தலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிரதீபாவின் சங்கிலியைப் பறித்து தப்பி ஓடிய மர்ம ஆசாமியை வலைவீசித் தேடிவருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணின் முகத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz