``எங்க பகுதியே வானம் பார்த்த பூமி. இங்கு பெய்யும் சொற்ப மழையை வெச்சு தத்திமுத்தி விவசாயம் பண்ணிக்கிட்டு வர்றோம். ஆனா, எங்க பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் தங்கவேல், தலைவர் சுப்பராயன், துணைத்தலைவர் கிருஷ்ணன் மூவரும் கூட்டுசேர்ந்து, எங்களுக்குத் தெரியாம எங்க பெயர்ல லோன் வாங்கியது, கடன் தர டெபாசிட் தொகை வாங்கியதுனு நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏமாத்தியிருக்காங்க’’ என்று மனம் நொந்தபடி பேசுகிறார்கள் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கும் ராஜபுரம் சுற்றுப்புற கிராம விவசாயிகள்.

‘என்ன நடந்தது?’ என்று எலவனூரைச் சேர்ந்த வீரபொம்மு என்பவரிடம் கேட்டோம். ‘‘எனக்கு நாலரை ஏக்கர் நிலமிருக்கு. ஆனா, வறட்சியால ஆடு, மாடுகளை வெச்சுக்கிட்டு காலத்தைத் தள்ளிக்கிட்டு இருக்கேன். கடந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சிட்டா அடங்கலைக் குறிச்சுக் கொடுத்து, பலதடவை அலைஞ்சு, ராஜபுரம் சொஸைட்டியில ரூ.50,000 ஆட்டுக்கடன் வாங்கினேன். அதை பாதி அடைச்சுட்டேன். வேற எந்த லோனையும் வாங்கலை. இந்த நிலையில, கடந்த வருசம் பிப்ரவரி 5- ம் தேதி அப்போதைய அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிட்டுச்சு. எங்க சொஸைட்டியில லோன் தள்ளுபடியான 140 விவசாயிகள் லிஸ்டுல என் பெயர்லயும் வட்டியோட ரூ.1,44,000 பயிர் கடன் தள்ளுபடியாகியிருப்பதா சொன்னாங்க. ‘லோனே வாங்கல. அப்புறம் எப்படி தள்ளுபடி’னு அதிர்ச்சியாயிட்டேன். செகரட்டரி தங்கவேல்கிட்டயும், தலைவர் சுப்பராயன்கிட்டயும் கேட்டதுக்கு, ‘அதுல உன் பெயர் இல்லை’னு மழுப்பினாங்க. ‘கலெக்டர்கிட்ட புகார் கொடுப்பேன்’னு சொன்னதால, அங்குள்ள ஊழியர்கள் லிஸ்டைக் கொடுத்தாங்க.

அதுல, என் பெயர் மட்டுமில்லாம, என்னைப்போல லோனே வாங்காத மேலும் எட்டு விவசாயிகளோட பெயர்களும் இருந்துச்சு. எங்க பேர்ல ரூ.8,89,000 கடன் வாங்கி மோசடி பண்ணியிருந்தாங்க. மாவட்ட ஆட்சியர், கூட்டுறவுத்துறை மாவட்ட இணை பதிவாளர்னு பலர்கிட்ட புகார் கொடுத்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகே விசாரணை நடத்தி, செயலாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செஞ்சதோட கைதும் பண்ணியிருக்காங்க. ஆனா, தலைவர் சுப்பராயனைக் கைது பண்ணலை. இந்த மாதிரி எத்தனை வருஷம், எத்தனை லட்சங்களைச் சுருட்டினாங்களோ?’’ என்று வெதும்பினார்.
அடுத்து பேசிய கேசவன் என்பவர், ‘‘கடந்த 2020 ஆகஸ்ட் மாசம், துணைத்தலைவர் கிருஷ்ணன், ‘உங்களுக்கு ரூ.3 லட்சம் லோன் சாங்ஷனாயிருக்கு. டெபாசிட் கட்டுங்க’னு ரெண்டு தடவையா ரூ.53,000 வாங்கிகிட்டார். ஆனா, லோன் தரவே இல்ல. ‘லோனை தாங்க. இல்லைன்னா, பணத்தைத் தாங்க’னு பலமுறை கேட்டோம். அதுக்கு அவர், ‘பணத்தை செகரட்டரிகிட்ட கொடுத்திருக்கேன்’னு சொன்னார். ஆனா அவர் தன்கிட்ட கிருஷ்ணன் கொடுக்கலைனு சொல்லிட்டார். கிருஷ்ணனோட மோசடி தெரிஞ்சதும், கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தோம். ‘சரியான ஆவணம் இல்லையே’னு எங்களை அனுப்பிட்டார்.

அதன்பிறகு கிருஷ்ணன், ‘உங்களைப்போல 15 பேரிடம் பணம் வாங்கி செகரட்டரிகிட்ட கொடுத்திருக்கேன்’னு என்கிட்ட சொன்னதை வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி, சி.எம் செல்லுக்கு புகார் அனுப்பியிருக்கேன். என்னைப்போல, இன்னும் 20 விவசாயிகள்கிட்ட டெபாசிட் தொகைனு சொல்லி மொத்தம் ரூ.3,46,250 வாங்கிக்கிட்டு, திருப்பித்தராம ஏமாத்திகிட்டு வர்றார்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய, வீரமலை என்ற விவசாயி, ‘‘நான் ராஜபுரம் சொஸைட்டியில ரூ.52,000 பயிர் கடன் வாங்கியிருந்தேன். லோன் தள்ளுபடியாவதை முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு, தலைவரும் செயலாளரும் கடந்த ஜனவரி மாசமே என்கிட்ட வந்து, ‘லோனைக் கட்டுங்க. புதுசா லோன் தர்றோம்’னு நச்சரிச்சாங்க. கடந்த வருஷம் ஜனவரி மாசம் ஆரம்பத்துலேயே லோன் தொகையைக் கட்டினேன். ஆனா, லோன் தள்ளுபடி லிஸ்டுல என் பெயர் இருப்பதா கேள்விப்பட்டு போய் பிரச்னை பண்ணினதும், ‘கட்ட மறந்துட்டோம்’னு சொல்லி, ரூ.52,000-ஐ கொடுத்தாங்க’’ என்றார்.

இதுகுறித்து, ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் துணைத்தலைவர் கிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘விவசாயிகள் 21 பேரும் செயலாளர் தங்கவேலுகிட்டதான் பணம் கொடுக்கப் போயிருக்காங்க. ஆனா அவரு, ‘துணைத்தலைவர்கிட்ட பணத்தைக் கொடுங்க. நான் வாங்கிக்கிறேன்’னு சொல்லி என்கிட்ட அனுப்பியிருக்கார். பிறகு என்கிட்ட வந்து விவசாயிகள் கொடுத்த பணத்தை வாங்கிகிட்டார்’’ என்றார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு செயலாளர் தங்கவேலிடம் பேசினோம். ‘‘நான் எந்த விவசாயி பேர்லேயும் பயிர் கடன் வாங்கலை. கிருஷ்ணன்கிட்ட விவசாயிகள் கொடுத்த டெபாசிட் தொகைக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. என்மேல துறைரீதியா நடவடிக்கை எடுத்திருக்காங்க. என்ன குற்றச்சாட்டுக்காகன்னு தெரியல’’ என்றார்.
இதுகுறித்து, கூட்டுறவுத்துறையின் கரூர் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தோம். ‘‘ராஜபுரம் கூட்டுறவு கடன் சங்க விவகாரம் குறித்து, வணிக குற்றப் புலனாய்வுத்துறைதான் நடவடிக்கை எடுத்திருக்கு. அவங்ககிட்ட கேளுங்க. மத்தபடி, சொஸைட்டி முறைகேடு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்றார்கள்.
கரூர் மாவட்ட வணிகக் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் செல்வமலரிடம் பேசினோம். ‘‘கூட்டுறவுத்துறை கரூர் மாவட்டப் பதிவாளர் விசாரணை செய்து, எங்களுக்கு அனுப்பிய அறிக்கை அடிப்படையில், தங்கவேல் மீது வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்திருக்கிறோம். மற்றொரு குற்றவாளி சுப்பராயனைத் தேடி வருகிறோம்’’ என்றார்.