Published:Updated:

அம்மாவின் சம்பளப் பணத்தை வாங்கச் சென்ற பள்ளி மாணவி! - பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் தலைமறைவு

மாணவி நேற்று முன்தினம் அவரின் தாய் விடுமுறையில் இருந்ததால், பள்ளி முடிந்ததும் மாலை சம்பளப் பணத்தைப் பெற்றுக்கொள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, மருத்துவர் ரஜினிகாந்த் மாணவியைத் தனியாக அறைக்கு அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது

கரூர் நகரில் இயங்கிவரும் பிரபல மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவரும் மருத்துவர் ஒருவர், அந்த மருத்துவமனையில் காசாளாராகப் பணியாற்றிவரும் பெண் ஒருவரின் 11-ம் வகுப்பு படிக்கும் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர், ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள், கரூரில் மருத்துவர் ஒருவர், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

மருத்துவமனை
மருத்துவமனை

கரூர் நகர்ப் பகுதியிலுள்ள வடக்கு பிரதட்சணம் சாலையில், தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் பிரபல மருத்துவரான ரஜினிகாந்த் என்பவர் பணிபுரிந்துவருகிறார். இதே மருத்துவமனையில் காசாளாராகப் பெண் ஒருவர் பணிபுரிந்துவருகிறார். அந்தப் பெண்ணின் மகள் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 11 - ம் வகுப்பு படித்துவருகிறார். தினமும் பள்ளி முடிந்ததும் மருத்துவமனைக்கு வந்து, பணி முடிந்ததும் தாயுடன் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த மாணவி. அதனால், அந்த மாணவி மருத்துவமனை ஊழியர்களிடமும், அங்கு பணியாற்றும் மருத்துவர்களிடமும் சகஜமாகப் பேசிப் பழகுவாராம்.

கரூர்: 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! - முதியவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

இந்த நிலையில், அந்தப் பள்ளி மாணவி நேற்று முன்தினம் அவரின் தாய் விடுமுறையில் இருந்ததால், பள்ளி முடிந்ததும் மாலையில் சம்பளப் பணத்தைப் பெற்றுக்கொள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது, மருத்துவர் ரஜினிகாந்த் பள்ளி மாணவியைத் தனியாக அறைக்கு அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ந்த அந்தப் பள்ளி மாணவி மருத்துவமனையிலுள்ள அந்த மருத்துவரின் அறையிலிருந்து கூச்சலிட்டபடி வெளியே சென்றிருக்கிறார். அதோடு, இது குறித்துத் தன் தாயிடம் நடந்ததைக் கூறி கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார்.

மருத்துவர் ரஜினிகாந்த்
மருத்துவர் ரஜினிகாந்த்

இதனால் கோபமடைந்த அந்த மாணவியின் தாய், இது குறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் மருத்துவர் ரஜினிகாந்த் மீதும், அவரின் மேலாளர் சரவணன் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், போலீஸாரின் விசாரணைக்கு பயந்து மருத்துவர் ரஜினிகாந்த் தலைமறைவாகிவிட்டார்.

`என் மகளுக்கு இந்த நிலை வந்திருந்தால்..!' -கோவை மாணவி பெற்றோரிடம் உறுதியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

இதற்கிடையில், மருத்துவமனையில் இருந்த மேலாளர் சரவணனைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவையிலுள்ள தனியார் பள்ளியில் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ள சூழ்நிலையில், கரூரில் பள்ளி மாணவிக்குத் தனியார் மருத்துவமனை மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு