Published:Updated:

கரூர் மாணவி தற்கொலை விவகாரம்: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஆய்வாளர்! - நடந்தது என்ன?

ஆய்வாளர், 'கோவை மாணவி தற்கொலை விவகாரத்தை டி.வியில் பார்த்து அப்செட்டாகி, கரூர் மாணவி தற்கொலை பண்ணிக்கிட்டாங்க' என்று பேட்டிக் கொடுத்தார். ஆனால், 'பாலியல் விவகாரம்' என்று பிரச்னை பெரிதாக, மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது.

கரூரில் உள்ள பிரபல பள்ளியில் 12 - ம் வகுப்பு படித்த மாணவி ஒருவர், பாலியல் தொல்லை சம்பந்தமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவத்தில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது, பலவித சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலணி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் மகள், வெண்ணைமலை அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12 - ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய அவர், திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

`பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும்’ -கரூர் பள்ளி மாணவியின் உருக்கமான கடிதம்

தனது மகள் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து, அலறி துடித்த அவரது தாய், உடனடியாக வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த தகவலின் பேரில், அங்கு விரைந்து வந்த வெங்கமேடு காவல் நிலைய போலீஸார், அந்த மாணவியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வு செய்வதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, அந்த மாணவி தன்னுடைய டைரியில் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.

அந்த கடிதத்தில், 'sexual harrasment' ஆல சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும். என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழறத்துக்கு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை. ஆனா முடியாதில்ல. i love you amma, சித்தப்பா, மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன், மன்னிச்சுருங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது. சாரி மச்சான் சாரி' என குறிப்பிட்டு, ஹார்ட்டின் படத்தையும் வரைந்து, கையெழுத்திட்டிருந்தார்.

வெங்கமேடு காவல் நிலையம்
வெங்கமேடு காவல் நிலையம்

இந்த நிலையில், மதியம் போல் இதுகுறித்து நம்மிடம் பேசிய, வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன், "அந்த மாணவி மிகவும் புத்திசாலியான மாணவி. அவர் கோயமுத்தூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவி குறித்த காணொளியை அடிக்கடி பார்த்து, மனதளவில் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த மாணவியின் இடத்தில் தன்னைப் பொருத்தி பார்த்துகொண்டு, அதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு, இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். இருந்தாலும், விசாரணையை தொடர்ந்துகொண்டிருக்கிறோம்" என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

அதை விகடன் இணையதளத்தில் செய்தியாகவும் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில், திடீரென ஆய்வாளர் கண்ணதாசன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். நேற்று மாணவி தற்கொலை செய்துகொண்டதும், அவரின் தாயும், உறவினர்களும் வெங்கமேடு காவல் நிலையத்துக்கு சென்றபோது, ஆய்வாளர் கண்ணதாசன் அவர்களிடம் முறையாக நடந்துகொள்ளவில்லை என்ற புகாரில், அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக, காவல்துறை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

அந்த கடிதம்
அந்த கடிதம்

ஆனால், இதன் உள்விவகாரம் அறிந்தவர்களோ, "அந்த மாணவி யார் பெயரையும் குறிப்பிடாதது தான் பிரச்னை. ஆனால், இவர் தற்போது படிக்கும் பள்ளி தரப்பிலும், ஏற்கனவே பத்தாவது வரை படித்த பள்ளி தரப்பிலும் விசாரணை போய்கிட்டு இருக்கு. இந்த நிலையில் தான் ஆய்வாளர், 'கோவை மாணவி தற்கொலை விவகாரத்தை டி.வியில் பார்த்து அப்செட்டாகி, கரூர் மாணவி இப்படி தற்கொலை பண்ணிக்கிட்டாங்க' என்று பேட்டிக் கொடுத்தார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Representational Image

ஆனால், 'பாலியல் விவகாரம்' என்று பிரச்னை பெரிதாக, மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனால், ஆய்வாளர் மீது முதல்கட்டமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மேற்கொண்டு விசாரணை செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்புள்ளதாக சொல்கிறார்கள். நேர்மையான விசாரணை செய்தால்தான், இந்த தற்கொலை விவகாரத்தில் ஒளிந்திருக்கும் உண்மையை வெளிக்கொணர முடியும்" என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில், கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல், இந்த வழக்கு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாறப்பட்டுள்ளதாக, காவல்துறை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு