Published:Updated:

கரூர்: `கொலையில் முடிந்த வாக்குவாதம்; இளைஞரைக் கொன்ற கும்பல்! போலீஸ் விசாரணை'

கொலை
கொலை ( Representational image )

இன்று தர்மராஜ் 20 பேர் கொண்ட கும்பலை அழைத்து வந்து, பிரபுவை இரும்பு ராடு, கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார்.

கரூர், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள பிச்சம்பட்டி பகுதியில் பஞ்சாயத்துக்குச் சென்ற இளைஞர் ஒருவரை 15-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்த சம்பவம், அந்தப் பகுதி மக்களை அதிரவைத்துள்ளது. இருதரப்பும் இரு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், பாதுகாப்புக்காகச் சம்பவ இடத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்
நா.ராஜமுருகன்
கரூர்:`ஆடுகளைக் கொன்னு, ஆத்திரத்தைத் தீர்த்துக்கிட்டேன்!’ - முன்விரோதத்தில் உறவினரின் வெறிச்செயல்

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆறு கதவணையிலிருந்து, திருச்சி மாவட்டம் தாயனூர் வரை செல்லும் கட்டளை மேட்டு வாய்க்காலின் இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி தனியார் கட்டுமான நிறுவனம் மூலம் நடந்துவருகிறது. அந்த வகையில், பிச்சம்பட்டி வழியாகச் செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் சீரமைப்பு பணி இரவு பகலாக நடந்துவருகிறது. நேற்று இரவு விருதுநகரைச் சேர்ந்த செந்தில் என்பவர் லாரியில் கட்டுமானப் பொருள் ஏற்றிக்கொண்டு பிச்சம்பட்டி பகுதியில் சென்றிருக்கிறார். லாரியைப் பின்தொடர்ந்து வந்த பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா (28), பிரபாகரன் (29) இருவரும், `லாரி வழிவிடவில்லை' எனக் கூறி, லாரி ஓட்டுநரைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

அடித்து நொறுக்கப்பட்ட அலுவலகம்
அடித்து நொறுக்கப்பட்ட அலுவலகம்
நா.ராஜமுருகன்

இதனால், லாரி ஓட்டுநர் செந்தில், தான் பணிபுரியும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளரான மணவாசி பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரிடம் தகவல் கொடுத்திருக்கிறார். இதனால், அந்த இடத்துக்கு வந்த மேலாளர் தர்மராஜையும், அந்த இரு இளைஞர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையில் நேற்றே கைகலப்பு நடக்கும் சூழல் ஏற்பட்டது.

ஆனால், நிறுவனத்தின் மேலாளரும், ஊர்ப் பொதுமக்களும், ``நாளை (இன்று) காலையில் பேசிக்கொள்ளலாம்" என்று சொல்லி சமாதானம் செய்து, அனுப்பிவைத்துள்ளனர். அப்போது, பிச்சம்பட்டியைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர், கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர் தர்மராஜைப் பார்த்து, வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ``எங்க ஊர் இளைஞர்களிடம் வாலாட்ட வேண்டாம். ஏற்கெனவே, உனது உறவினரைக் கொன்றிருக்கிறேன். உன்னையும் கொன்றுவிடுவேன்" என்று மிரட்டியதாகச் சொல்கிறார்கள். இந்தநிலையில், இன்று காலை 10 மணிக்கு பிச்சம்பட்டி பகவதி அம்மன் கோயில் முன்பாக பேசிக்கொண்டிருந்தபோது, தர்மராஜ் 20 பேர் கொண்ட கும்பலை அழைத்து வந்து சமாதானம் பேசாமல், பிரபுவை இரும்பு ராடு மற்றும் கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, தப்பிவிட்டார்.

கொலை செய்யப்பட்ட பிரபு
கொலை செய்யப்பட்ட பிரபு

இதனால் கோபமடைந்த பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் கிளம்பிச் சென்று கட்டுமான நிறுவனத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி, ஜே.சி.பி இயந்திரம், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். இது குறித்துத் தகவல் அறிந்த கரூர் எஸ்.பி சுந்தரவடிவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மாயனூர் காவல் நிலைய போலீஸார், கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடலைக் கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

கொலையானவரும், கொலை செய்தவரும் இரு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அசம்பாவிதம் ஏதுவும் நிகழாமல் தடுக்க, பிச்சம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலைச் சம்பவத்தை அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி ராதிகாவும், சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகிறார். கொலை செய்யப்பட்ட பிரபு, ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புள்ளர் எனச் சொல்கிறார்கள். கடந்த 2001-ம் ஆண்டு பொன்னுச்சாமி என்பவரை முன்விரோதம் காரணமாக பிரபு வெட்டிக் கொலை செய்ததாகச் சொல்கிறார்கள்.

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்
நா.ராஜமுருகன்

கொலை செய்யப்பட்ட பொன்னுச்சாமி, தர்மராஜுக்கு உறவினர் என்று சொல்லப்படுகிறது. இதனால், இருதரப்புக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், நேற்று நடந்த பிரச்னையில் பிரபு, தர்மராஜை மிரட்டியதால், பழைய பகையைக் கனலாக மனதில் வைத்திருந்த தர்மராஜ், ஆட்களோடு வந்து, பிரபுவை வெட்டிக் கொலை செய்து பழி தீர்த்துக்கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இளைஞர் ஒருவர் கிராமத்தின் முக்கியப் பகுதியில் பகல் நேரத்தில் துள்ளத்துடிக்க வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு