Published:Updated:

`ஆடி காரில் விரட்டிச் சென்றவராலேயே விபத்து ஏற்பட்டது!’ - கேரள மாடல்கள் மரணத்தில் திருப்பம்

கேரள மாடல்கள் ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன்
News
கேரள மாடல்கள் ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன்

பார்ட்டிக்குச் செல்லும் பல பெண்களை இது போன்று வளைப்பதாக ஷைஜூ மீது புகார் கிளம்பியதை அடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று நாள்கள் போலீஸ் கஸ்டடியில் ஷைஜூவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மிஸ் கேரளா 2019-ஆக தேர்வானவர் ஆன்சி கம்பீர் (25). அந்த ஆண்டு மிஸ் கேரளா ரன்னர் அப் அஞ்சனா ஷாஜன் (24). திருவனந்தபுரம், ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த ஆன்சி கம்பீரும், திருச்சூரைச் சேர்ந்த அஞ்சனா ஷாஜனும் தோழிகளாக இருந்தனர். இருவரும் விளம்பர ஷூட்டிங்குக்காகக் கடந்த அக்டோபர் மாதம் கொச்சி சென்றனர். அக்டோபர் 31-ம் தேதி இரவு கொச்சியிலுள்ள `நம்பர் 18' ஹோட்டலில் டி.ஜே பார்ட்டியில் கலந்துகொண்டனர். நள்ளிரவு வரை பார்ட்டி நடந்த நிலையில், ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன், அவர்களின் நண்பர்களான முகமது ஆசிக், அப்துல் ரஹ்மான் ஆகியோர் அந்த ஹோட்டலிலிருந்து வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றனர்.

எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் வேகமாகச் சென்ற கார், பாலாரிவட்டத்திலிருந்து இடப்பள்ளி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. நவம்பர் மாதம் 1-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடந்த இந்த விபத்தில் ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

விபத்தில் நொறுங்கிய கார்
விபத்தில் நொறுங்கிய கார்

படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட முகமது ஆஷிக் சிகிச்சை பலனின்றி நவம்பர் 7-ம் தேதி இறந்தார். காரை ஓட்டிச் சென்ற அப்துல் ரஹ்மான் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு நலமடைந்தார். போதையில் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக அப்துல் ரஹ்மான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தங்கள் காரை வேகமாகப் பின்தொடர்ந்துவந்த ஆடி கார்தான் விபத்துக்குக் காரணம் என அப்துல் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த ஆடி கார் பற்றி விசாரித்தபோது அது ஷைஜூ தங்கச்சன் என்பருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. அவர் மாடல்களின் காரைப் பின்தொடர்ந்ததுடன் விபத்து நடந்த பிறகு 'நம்பர் 18' ஓட்டல் உரிமையாளர் ராய் என்பவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகுதான், ஓட்டலில் பார்ட்டி நடந்த ஹாலிலுள்ள சிசிடிவி காட்சிகள் பதிவான டி.வி.ஆர்-ஐ ராய் அழித்துள்ளார். இது சம்பந்தமாக ராய்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால் ஷைஜூவிடம் விசாரித்தபோது போதையில் கார் ஓட்ட வேண்டாம் என எச்சரிப்பதற்காகப் பின்தொடர்ந்ததாகக் கூறியிருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட ஷைஜூ தங்கச்சன்
கைதுசெய்யப்பட்ட ஷைஜூ தங்கச்சன்

இந்த நிலையில் பார்ட்டிக்குச் செல்லும் பல பெண்களை இது போன்று வளைப்பதாக ஷைஜூ மீது புகார் கிளம்பியதை அடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று நாள்கள் போலீஸ் கஸ்டடியில் ஷைஜூவிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஷைஜூ ஆடி காரில் துரத்திச் சென்றதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் போதைப்பொருள் விநியோகம் போன்ற செயல்களிலும் ஈடுபடிருப்பதாகத் தெரியவந்ததால் மேலும் மூன்று நாள்கள் கஸ்டடி கேட்டிருக்கிறது போலீஸ். ஏற்கெனவே மூன்று நாள்கள் கஸ்டடி நேற்று முடிந்த நிலையில், இன்று முதல் மேலும் மூன்று நாள்களுக்கு போலீஸ் கஸ்டடி விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.