Published:Updated:

கேரளா: மன் கி பாத் உரை; தைவான் நாட்டு விருது! - வேம்பநாடு ராஜப்பனிடம் பண மோசடி?

ராஜப்பன்
ராஜப்பன்

இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில், வள்ளத்தில் சென்று வேம்பநாடு காயலில் தினமும் பிளாஸ்டிக்குகளைச் சேகரிக்கும் ராஜப்பன் பற்றி பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அவருக்குப் பலர் வழங்கிய நன்கொடையை சகோதரியே எடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வேம்பநாடு காயலுக்குச் சென்றால் தினமும் வள்ளத்தில் சென்று பிளாஸ்டிக் பாட்டில் போன்ற மக்காத குப்பைகளைச் சேகரித்துவரும் ராஜப்பனைக் காணலாம். வேம்பநாடு காயலிலும், காயலை ஒட்டியுள்ள கால்வாய்களிலும் ராஜப்பனின் வள்ளம் வருவதைக் கண்டால் கரையோரம் நிற்பவர்கள் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் இருந்தால், அவரை நோக்கி வீசுவார்கள். அதைக் குச்சி மூலம் சேகரித்து படகில் சேர்ப்பார் ராஜப்பன். வயிற்றுப் பிழைப்பு ஒருபுறம் இருந்தாலும், வேம்பநாடு காயலைச் சுத்தப்படுத்தும் நோக்கில் இதைச் செய்து வருகிறார் ராஜப்பன்.

இரண்டு கால்களும் செயல் இழந்த நிலையில் சகோதரியின் உதவியோடு வாழ்ந்துவருகிறார் ராஜப்பன். ராஜப்பனைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியிலும் பேசியிருக்கிறார். வேம்பநாடு காயலை அடுத்த மஞ்சாடிகிரியில் உள்ளது ராஜப்பனின் வீடு. குமாரகம், கங்கணம் பகுதிகளில் மாலை 4 மணிக்குத் தொடங்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் பணி முடித்து அவர் வீட்டுக்குச் செல்லும்போது இரவு 9 மணி ஆகிவிடும்.

வேம்பநாடு காயலைச் சுத்தப்படுத்தும் ராஜப்பன்
வேம்பநாடு காயலைச் சுத்தப்படுத்தும் ராஜப்பன்

இந்தநிலையில் அவருக்கு `இன்டர்நேஷனல் ஷைனிங் வேர்ல்டு எர்த் புரொட்டக்‌ஷன்’ அவார்டை தைவான் அரசு வழங்கியுள்ளது. பாராட்டுப் பத்திரம், விருது மற்றும் பத்தாயிரம் அமெரிக்க டாலர் ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டன. அந்தப் பரிசுத்தொகையின் இந்திய மதிப்பு ரூ.7,30,081. மேலும், ராஜப்பனின் சேவையைப் பற்றி அறிந்தவர்கள் அவருக்குப் பணம் அனுப்புவது வழக்கம். நன்கொடைகள் பெறுவதற்காக ராஜப்பன் வங்கிக் கணக்கு ஆரம்பித்தார். அவரால் நடந்து வங்கிக்குச் செல்ல முடியாது என்பதால், அவரது சகோதரியையும் இணைத்து ஜாயின்ட் அக்கவுன்ட்டாகத் தொடங்கியிருந்தார்.

இந்தநிலையில், தைவான் அரசு வழங்கியிருந்த விருதுக்கான தொகை வங்கிக் கணக்கில் வந்துவிட்டது என்பதை உறுதி செய்ய பேங்க் ஸ்டேட்மென்ட்டை எடுத்து அவர்களுக்கு அனுப்ப வேண்டும். இதற்காக அவர் வங்கிக்குச் சென்றுள்ளார். அந்த ஸ்டேட்மென்ட்டை பார்த்தபோது அதிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாயை அவரது சகோதரி எடுத்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜப்பன் இது குறித்து கோட்டயம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

வள்ளத்தில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிக்கும் ராஜப்பன்
வள்ளத்தில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிக்கும் ராஜப்பன்

இது பற்றிப் பேசிய ராஜப்பன், "ஒரு கிலோ பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு 12 ரூபாய்தான் கிடைக்கும். வள்ளம் நிறைய பாட்டில்கள் சேகரித்தாலும் இரண்டு மூன்று கிலோதான் தேறும். சிறு வயது முதலே கால் நடக்க முடியாமல் இப்படித்தான் இருக்கிறது. படகில் ஊர்ந்துதான் ஏறிச் செல்வேன். ஒரு வெள்ளப்பெருக்கில் எனது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. தண்ணீர் வடியும் வரை பாலத்துக்கு அடியில் நின்ற படகில் வசித்தேன். அப்போது எனது வீட்டுக்கு அருகில் நான் சாக்குப்பையில் சேகரித்துவைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டில்களை தண்ணீர் அடித்துக்கொண்டு போய்விட்டது.

நல்ல ஒரு வீடு கட்டி மரணிப்பது வரை அதில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை. அதற்காகத்தான் வங்கியில் பணம் வைத்திருந்தேன். அந்தப் பணத்தை என் சகோதரி எடுத்துள்ளார். எனக்குச் சிலர் வழங்கிய இரண்டு வள்ளத்தையும் உறவினர்கள் எடுத்துக்கொண்டனர். இப்போது அவர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள்" என்றார். இந்தப் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு