Published:Updated:

``கேரளத்தை உலுக்கிய விஸ்மயா மரண வழக்கில் கணவர் குற்றவாளி” - ஓராண்டுக்குள் வழங்கப்பட்ட தீர்ப்பு

கணவர் வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட விஸ்மயா

'என் மகளுக்கு ஏற்பட்ட கதி வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. அதற்கு இந்தத் தீர்ப்பு ஓர் உதவியாக இருக்கட்டும்' என்றார் விஸ்மயாவின் தாய் ஸஜிதா.

``கேரளத்தை உலுக்கிய விஸ்மயா மரண வழக்கில் கணவர் குற்றவாளி” - ஓராண்டுக்குள் வழங்கப்பட்ட தீர்ப்பு

'என் மகளுக்கு ஏற்பட்ட கதி வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. அதற்கு இந்தத் தீர்ப்பு ஓர் உதவியாக இருக்கட்டும்' என்றார் விஸ்மயாவின் தாய் ஸஜிதா.

Published:Updated:
கணவர் வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட விஸ்மயா

கேரள மாநிலம், கொல்லம் நிலமேடு பகுதியைச் சேர்ந்த திரிவிக்கிரமன் நாயரின் மகள் விஸ்மயா (24). இவர் பந்தளம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். படிப்பு முடியும் முன்பே விஸ்மயாவுக்கும் போருவழி அம்பலத்தும் பாகத்தே வீட்டைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளரான கிரண் குமாருக்கும் 2020-ம் ஆண்டு, மே மாதம் 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 100 பவுன் தங்க நகைகள், ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலம், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் காரின் மதிப்பு குறைவு என கூறி விஸ்மயாவை கணவர் கிரண்குமார் டார்ச்சர் செய்திருக்கிறார்.

கிரண்குமார் - விஸ்மயா
கிரண்குமார் - விஸ்மயா

இது பற்றி விஸ்மயா தன் உறவினர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் தகவலில், 'வரதட்சணையாகக் கொடுத்த கார் அதிக மைலேஜ் கொடுக்காததால், கணவர் என்னையும் அப்பாவையும் திட்டிக்கொண்டிருந்தார். அப்போது நான் அறையைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது என்னைத் தரையில் தள்ளி முகத்தில் மிதித்தார்' எனக் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் முகத்தில் காயம் இருக்கும் தனது புகைப்படத்தையும் விஸ்மயா வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். இதையடுத்து 2021-ம் ஆண்டு, ஜூன் மாதம் 21-ம் தேதி கணவர் வீட்டில் பாத்ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் விஸ்மயா இறந்துகிடந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பற்றி போலீஸார் விசாரணை நடத்தி கிரண் குமாரைக் கைதுசெய்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் வேலையிலிருந்தும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு கொல்லம் ஒன்றாம் அடிஷனல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கொலை நடந்து ஓர் ஆண்டுக்கு உள்ளாகவே இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் 42 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 120 ஆதாரங்கள் பரிசோதிக்கப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.சுஜித் அளித்த தீர்ப்பில் விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த வழக்கில், தண்டனை நாளை அறிவிக்கப்படும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வரதட்சணைக் கொடுமை, தற்கொலைக்குத் தூண்டுதல், குடும்ப வன்முறை ஆகிய குற்றங்கள் இந்த வழக்கில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கிரண்குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரதட்சணை கேட்டுத் தாக்கப்பட்டதாக விஸ்மயா வெளியிட்ட போட்டோ
வரதட்சணை கேட்டுத் தாக்கப்பட்டதாக விஸ்மயா வெளியிட்ட போட்டோ

மகளின் மரணத்துக்கு நீதி கிடைத்துள்ளதாக விஸ்மயாவின் தந்தை திரிவிக்கிரமன் நாயரும், தாய் சஜிதாவும் தெரிவித்துள்ளனர். இது பற்றி விஸ்மயாவின் தாய் சஜிதா கூறுகையில், "என் மகளுக்கு ஏற்பட்ட கதி வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. அதற்கு இந்தத் தீர்ப்பு ஓர் உதவியாக இருக்கட்டும். கிரண்குமாருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன். எங்களுடன் உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி" என்றார். கேரளாவை உலுக்கிய விஸ்மயா மரண வழக்கில் ஒராண்டுக்குள்ளாகவே தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், அவரின் கணவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism