Published:Updated:

கேரளா: 6 வயது சிறுமி கொலை; 3 ஆண்டுகளாக சிறார் வதைக் கொடூரம்! - டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகி கைது

சிறார் வதை
சிறார் வதை

டி.ஒய்.எஃப்.ஐ-யின் ஏரியா தலைவரான அர்ஜுன் அந்தச் சிறுமியை மூன்று வயது முதலே பலமுறை சிறார் வதை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியாரில் சுரக்குளம் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக்கொண்ட கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனர். சுரக்குளம் எஸ்டேட்டிலுள்ள ஒரு வீட்டுக்குள் கடந்த 30-ம் தேதி ஆறு வயது சிறுமி கயிற்றில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். அவரின் பெற்றோர் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புவார்கள். அந்தச் சிறுமியின் சகோதரன் முடிவெட்டச் சென்றிருந்த சமயத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. எனவே சிறுமி விளையாடும்போது, அறையில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில் கழுத்து சிக்கி இறந்திருக்கலாம் எனப் பெற்றோர் கருதினர். ஆனால், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சிறுமி பலமுறை சிறார் வதை செய்யப்பட்டிருப்பதாக பகீர் தகவலைத் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகி அர்ஜுன்
கைது செய்யப்பட்ட டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகி அர்ஜுன்

இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார் அந்தச் சிறுமியின் வீட்டை ஒட்டி வசித்துவந்த அர்ஜுன் (22) என்பவர் சிறுமியை சிறார் வதை செய்ததாகக் கண்டுபிடித்தனர். இதையடுத்து கடந்த 4-ம் தேதி அர்ஜுன் கைதுசெய்யப்பட்டார். சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ-யின் ஏரியா தலைவராக இருக்கிறார் அர்ஜுன். அந்தச் சிறுமியை மூன்று வயது முதலே பலமுறை சிறார் வதை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் அர்ஜுன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மாதம் 30-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த அர்ஜுன் ,சிறுமியை சிறார் வதை செய்திருக்கிறார். அதில் சிறுமி மயங்கியிருக்கிறார். அவள் இறந்துவிட்டாள் எனக் கருதிய அர்ஜுன் அந்த அறையில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில் சிறுமியை தொங்கவிட்டிருக்கிறார். அதன் பிறகு அங்கிருந்து வெளியேறிவிட்டார். பின்னர் சிறுமியின் சகோதரன் வீட்டில் சென்று பார்த்து சத்தம் போட்டிருக்கிறான். அதன் பின்னர் அந்தப் பகுதியினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் பிடியில் அர்ஜுன்
போலீஸ் பிடியில் அர்ஜுன்

மேலும் சிறார் வதை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீஸார் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அர்ஜுனிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறி சிக்கிக்கொண்டார். டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகி என்பதால், ஆளுங்கட்சி மென்மையாக விசாரணை நடத்துவதாக எதிர்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. வண்டிப்பெரியாரில் ஆறு வயது சிறுமி மூன்று ஆண்டுகளாக சிறார் வதை செய்யப்பட்டு, இறுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு