கரூர் மாவட்டம், குளித்தலை, காவேரி நகர் என்.ஜி.ஓ.காலனி பகுதியைச் சேர்ந்தவர் கலைமணி (52). இவர், தாலியம்பட்டி பகுதியில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் பேசுவதாக, இவரின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபர், பான் கார்டு எண், வங்கிக் கணக்கில் இணைக்க சில விவரங்களை ஆசிரியர் கலைமணியிடம் கேட்டுள்ளார். அப்போது, தகவல்களைத் தர மறுத்து, தான் அவசரமாகப் பால் வாங்க வெளியே செல்லவிருப்பதாகக் கூறி, இணைப்பைத் துண்டித்திருக்கிறார். அதன் பின்னர், கலைமணி அருகில் உள்ள கடைக்குப் பால் வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவரின் மகள் அக்ஷயா கலைமணியின் செல்போனை பயன்படுத்தியபோது, குறுஞ்செய்தியில் வந்த லிங்க்கை கிளிக் செய்திருக்கிறர். அதன் மூலம், ஓ.டி.பி எண்ணைச் சமர்ப்பித்து வங்கி விவரங்களை அளித்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகு, ஐந்து நாள்கள் கழித்து ஏப்ரல் 15-ம் தேதி எல்.ஐ.சி பிரீமியத் தொகை செலுத்துவதற்காக எஸ்.பி.ஐ வங்கிக்குச் சென்ற கலைமணி, வங்கிக் கணக்கில் உள்ள தனது இருப்புத்தொகையைப் பார்த்திருக்கிறார்.

அப்போதுதான், இன்டர்நெட் பேங்க்கிங் மூலம் ரூ.2,99,900 ஹெச்.டி.எஃப்.சி கணக்கு ஒன்றுக்குப் பணம் மாற்றப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதேபோல், மீண்டும் அதே வங்கிக் கணக்கிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் இன்டர்நெட் பேங்க்கிங் மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த கலைமணி, தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.3,24,900 எடுக்கப்பட்டுருப்பதை அறிந்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், கரூர் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அம்சவேணி, இணையதளம் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்த அடையாளம் தெரியாத மர்ம நபர் குறித்து விசாரித்துவருகிறார். அதோடு, "சமீபகாலமாக இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துவருவதற்கு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். மேலும் இணையவழிக் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற இலவச எண்ணை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று போலீஸார் தெரிவித்தனர்
