Published:Updated:

ஊரடங்கிலும் தொடரும் பழிக்குப் பழி! -குளித்தலையில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம் ( நா.ராஜமுருகன் )

இந்தக் கொலையைச் செய்தது, முன்பு படுகொலை செய்யப்பட்ட அன்பழகனின் ஆதரவாளர்கள்தான் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால், அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் போலீஸார்.

இந்தத் ஊரடங்கு காலத்திலும் குளித்தலைப் பகுதியில் பழிக்குப் பழியாக இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட, அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள், மக்கள். 'காவல்துறையின் மெத்தனப்போக்கே இந்தக் கொலைக்குக் காரணம்' என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட 'லேப்' சரவணன்
கொலை செய்யப்பட்ட 'லேப்' சரவணன்
நா.ராஜமுருகன்
`என் அப்பா கையை உடைச்சவனை விடக்கூடாது' -கரூரில் இளைஞரின் சபதத்தால் பால்காரருக்கு நேர்ந்த கொடூரம்

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது, நெய்தலூர் மற்றும் நச்சலூர். இந்தப் பகுதியைச் சுற்றி இளம் வயது கொலை செய்யும் குற்றவாளிகள் அதிகரிப்பதாகவும், அவர்கள் பணத்துக்குக் கொலை செய்யும் கொடூர கூலிப்படையினராகப் பெருகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில், அடிக்கடி அந்தப் பகுதியில் கொலைச் சம்பவங்கள் நடப்பது, பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு, நச்சலூர் அருகில் உள்ள தெற்கு மாடுவிழுந்தான் பாறையைச் சேர்ந்த பால் வியாபாரி அன்பழகன் என்பவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததது. இந்தக் கொலையைச் செய்ததாக, நச்சலூர் சொட்டல் கீழ்நந்தவனக்காட்டைச் சேர்ந்த கதிரேசன், வினோத், ராஜேஷ், குமார் ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

கொலை
கொலை
Representational Image

கதிரேசனின் தந்தையின் கையை அன்பழகன் உடைத்ததால், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் நண்பர்களோடு சேர்ந்து கதிரேசன், அன்பழகனைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. சிறையில் நால்வரும் இருக்க, அவர்களை ஜாமீனில் வெளியே எடுக்க முயன்றாராம், மாடுவிழுந்தான் பாறையைச் சேர்ந்த 'லேப்' சரவணன். இந்த நிலையில், நச்சலூர்ப் பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்த அவரை, ஒரு கும்பல் நேற்று அதிகாலை வெட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலையைச் செய்தது, முன்பு படுகொலை செய்யப்பட்ட அன்பழகனின் ஆதரவாளர்கள்தான் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால், அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் போலீஸார்.

இது குறித்து, நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், "வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட 'லேப்' சரவணன், நச்சலூர் பகுதியில் லேப் நடத்தி வருகிறார். இவர்மீது ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ஒரு கூலிப்படைக்குத் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். அதோடு, மருத்துவம் படிக்காமலேயே மருத்துவர் போல் செயல்பட்டு, போலீஸிடம் சிக்கியும் உள்ளார். இவர் கதிரேசனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அன்பழகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் கதிரேசன் உள்ளிட்ட நான்கு இளைஞர்களையும் ஜாமீனில் வெளியில் எடுக்க முயற்சி செய்தார்.

கொலை செய்யப்பட்ட 'லேப்' சரவணன்
கொலை செய்யப்பட்ட 'லேப்' சரவணன்
நா.ராஜமுருகன்

இதனால் கோபமடைந்த அன்பழகன் தரப்பு ஆள்கள், 'லேப்' சரவணனை வெட்டி சாய்த்துவிட்டது. இந்தப் பகுதி கூலிப்படையின் கூடாரமாக மாறிவருவதாகவும், அதுவும் 25 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் பலர் கொலை செய்பவர்களாக மாறி வருவதாகவும் ஜூனியர் விகடனில் கட்டுரை வந்தது. அதுபோலவே, இப்போது பழிக்குப் பழியாக கொலைச் சம்பவங்கள் நடந்துவருகின்றன.

இந்தக் கொலைச் சம்பவங்களுக்குக் காரணம், இங்கு காவல்துறை சரியாக இல்லை என்பதுதான். 'லேப்' சரவணன் கொலை செய்யப்பட்டதும், நேற்று திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன், குளித்தலை காவல் நிலையத்துக்கு வந்து சத்தம் போட்டார். ஆனால், 'கொரோனா ஊரடங்கு பாதுகாப்பில் இருந்தோம்'னு போலீஸார் சாதாரணமாகச் சொல்ல, கண்டிப்புக் காட்டிவிட்டுப் போயிருக்கிறார். ஆனால், ஜெயிலுக்குள் இருக்கும் கதிரேசன் உள்ளிட்ட நால்வரையும், வெளியே வரும்போது கொலை செய்ய அன்பழகன் ஆதரவாளர்கள் திட்டம் போடுவதாகச் சொல்கிறார்கள்.

கொலை நடந்த இடத்தில் எஸ்.பி பாண்டியராஜன்
கொலை நடந்த இடத்தில் எஸ்.பி பாண்டியராஜன்
நா.ராஜமுருகன்

அப்படி செய்யும்பட்சத்தில், பதிலுக்கு கதிரேசன் தரப்பு அன்பழகன் ஆள்களை கொலை செய்வார்கள். இப்படி நான்ஸ்டாப்பாக இங்கே கொலை நடப்பதை தடுக்க, உடனே குளித்தலை, தோகைமலை காவல் நிலையங்களில் அதிரடியாகச் செயல்படும் ஆய்வாளர்களையும் நியமிக்கணும். இல்லைன்னா, இந்தப் பகுதி கூலிப்படையினரின் கூடாரமாக மாறுவதை தடுக்க முடியாது" என்றார்கள்.

'லேப்' சரவணனை கொலை செய்ததாக, தெற்கு மாடுவிழுந்தான் பாறையைச் சேர்ந்த முருகானந்தம், செல்லமுத்து ஆகிய இளைஞர்கள் கைது செய்யபட்டுள்ளனர். இது குறித்து, கரூர் மாவட்ட எஸ்.பி பாண்டியராஜனிடம் பேசினோம். "பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்துள்ளது. காவல்துறையின் செயல்பாடு மோசமாக உள்ளது என்று சொல்றது தவறான தகவல். அங்கு நெகடிவ் செயல்களில் ஈடுபடுபவர்களை ஒழிக்க பிளான் பண்ணிகிட்டு இருக்கிறோம். மத்தபடி, அங்கே ரௌடியிஸமெல்லாம் இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு