Published:Updated:

`8 துப்பாக்கி.. 60 தோட்டாக்கள்..!’ கள்ளத் துப்பாக்கி விற்பனையில் சிக்கிய கும்பகோணம் மருத்துவர்

துப்பாக்கி
துப்பாக்கி ( ம.அரவிந்த் )

உடனடியாக டாக்டர் ராம்குமார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, 5 ஏர்கன் வகைகள், ஒரு ரிவால்வர், 2 பெல்ட் ரிவால்வர் என 8 துப்பாக்கிகள் மற்றும் அதனுடன் 67 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.

கும்பகோணம் அருகே டாக்டர் ஒருவர் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்து வந்ததைக் கண்டுபிடித்த போலீஸார் அவரையும் அதற்கு உடந்தையாக இருந்த மற்ற இரண்டு பேரையும் கைது செய்ததுடன், அந்த டாக்டரிடம் இருந்து 8 துப்பாக்கிகள் மற்றும் 60 தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தோட்டா
தோட்டா

கும்பகோணம் பகுதியில், அதிகளவில் துப்பாக்கிகள் புழக்கம் இருப்பதாகவும், இதனால் துப்பாக்கி பயன்படுத்துவது அதிகமாகியிருப்பதாகவும் குற்ற தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் எங்கு, எப்படி துப்பாக்கி கைக்கு வருகிறது; இதை யார் விற்பனை செய்கிறார்கள் என கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதற்காக ரவுடிகள், கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் கைதாகி சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள் என பலரது பட்டியல்களை திரட்டி அதில் இருப்பவர்களில் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து, கும்பகோணம் அடுத்த விளந்தகண்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வருவதைக் கண்டுபிடித்ததுடன் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையின்போது சக்திவேல் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. மேலும், அவர் துப்பாக்கிகள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

டாக்டர் ராம்குமார்
டாக்டர் ராம்குமார்

இந்த நிலையில் தொடர்ந்து அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், `திருப்பனந்தாள் அடுத்த மகாராஜபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ராம்குமார் என்பவரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கியதாக தெரிவித்தார். அத்துடன் டாக்டர் ராம்குமார் கள்ளத்தனமாக துப்பாக்கி விற்பனை செய்கிறார். அவர் துப்பாக்கிகளை விற்பதற்கு நானும் முட்டக்குடியைச் சேர்ந்த அரவிந்தன் ஆகிய இருவரும் உதவியாக இருந்தோம். துப்பாக்கி விற்ற பிறகு எங்களுக்கு கமிஷனாக பணம் கொடுப்பார்’ என தெரிவித்தார்.

இதையடுத்து, திருப்பனந்தாள் போலீஸார் டாக்டர் ராம்குமார் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், உடனடியாக டாக்டர் ராம்குமார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, 5 ஏர்கன் வகைகள், ஒரு ரிவால்வர், 2 பெல்ட் ரிவால்வர் என 8 துப்பாக்கிகள் மற்றும் அதனுடன் 67 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். டாக்டர் வீட்டில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரவிந்தன்
அரவிந்தன்

போலீஸார் டாக்டர் ராம்குமாரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது, `நான் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ்., எம்.டி., படித்தேன். பின்னர் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் உள்ள ஒரு கிளினிக்கில் வேலை பார்த்து வந்தேன்.

எனக்கு துப்பாக்கிகள் மீது அதிகமான ஆர்வம் இருந்தது. அதனால் வெளிநாடுகளிலிருந்து அனுமதி இல்லாமல் கொண்டு வரப்படும் விதவிதமான துப்பாக்கிகளைக் குறைந்த விலைக்கு வாங்குவேன்.

சக்திவேல்
சக்திவேல்

பின்னர் அதை மற்றவர்களிடம் அதிக விலைக்கு விற்று வந்தேன் இதற்கு புரோக்கர்களாக சக்திவேல், அரவிந்தன் ஆகிய இருவரும் செயல்பட்டனர்’ எனக் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, டாக்டர் ராம்குமார் யார் யாரிடம் அனுமதியில்லாத கள்ளத் துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளார் என்பது போன்ற விசாரணையைத் தொடர்ந்து வருவதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு