Published:Updated:

நண்பனின் பைக்; தப்பிக்க புது டெக்னிக்; கும்பகோணத்தில் செயின் பறிக்கும் இளைஞர்கள் கைதானது எப்படி?

நகை திருட்டில் ஈடுப்பட்ட கும்பலை கைது செய்த போலீஸ் டீம்
நகை திருட்டில் ஈடுப்பட்ட கும்பலை கைது செய்த போலீஸ் டீம்

ஐந்து இளைஞர்களைக் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 11 பவுன் நகை, இரண்டு உயர் ரக பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீஸிடம் சிக்காமல் இருக்க நண்பர்களிடம் பைக்கை வாங்கிச் சென்று பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வந்த திருட்டு கும்பலை சேர்ந்த ஐந்து இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்காக 36 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அந்த வழிப்பறி கும்பலை போலீஸ் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகை
பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகை

கும்பகோணம் பகுதிகளில் தொடர்ச்சியாக பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக சாலையில் நடந்து செல்லும் பெண்களைக் குறிவைத்து அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கின்ற தாலி செயின் உள்ளிட்ட நகைகளை அந்த கும்பல் பறித்து சென்றனர். இது தொடர்பாகத் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு புகார்கள் வந்தன.

உடனடியாக பெண்களிடம் செயின் திருட்டில் ஈடுபட்டு வரும் திருட்டுக் கும்பலை கைது செய்வதற்காக கும்பகோணம் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் எஸ்.ஐ கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தர விட்டார். எஸ்.ஐ மோகன்,சிறப்பு எஸ்.எஸ்.ஐ ராஜா, ரமேஷ், ஜம்புலிங்கம் உள்ளிட்ட 9 போலீஸாருடன் இதற்கான விசாரணையில் ஈடுபட்டனர்.

பெண்களிடம் திருடிய நகை
பெண்களிடம் திருடிய நகை

செயின் பறிப்பில் ஈடுப்பட்டு வந்த கும்பலைப் பற்றிய தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து செயின் திருட்டு சம்பவங்கள் நடைப்பெற்றது உள்ளிட்ட 36 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமாக டூவீலரில் சென்ற இரண்டு இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து செயின் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் கும்பல் குறித்து கண்டு பிடித்தனர். மேலும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த அஜய்குமரன், சந்தோஷ், சிலம்பு, ஹரிதாஸ் நாச்சியார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜகன் என்கிற தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 11 பவுன் நகை, இரண்டு விலை உயர்ந்த பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைப்பற்றப்பட்ட டூவீலர்
கைப்பற்றப்பட்ட டூவீலர்

இது குறித்து தனிப்படை எஸ்.ஐ கீர்த்திவாசனிடம் பேசினோம், " ஐந்து பேர் கொண்ட இளைஞர் கும்பல் தொடர்ந்து பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுவந்தனர். அவர்கள் குறித்து ஒரு மாதத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டோம். 36 இடங்களில் சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் ஒரு பைக்கில் ஹெல்மெட் அணிந்து செல்லும் இரண்டு இளைஞர்கள் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களைப் பின் தொடர்ந்து சென்றபோது ஒரு தெருவிற்குள் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. கொஞ்ச நேரத்தில் ஹெல்மெட் அணிந்த வேறு ஒரு நபர் அந்த தெருவில் இருந்து வந்தார். நாம் தொடர்ந்து வந்த நபர் இல்லை என நினைத்தோம். அப்போதுதான் அந்த நபர் அதே ஹெல்மெட் அணிந்து சென்றது தெரிந்தது. உடனடியாக அவரைப் பின்தொடர்ந்ததுடன் அவரிடம் விசாரணை நடத்தினோம்.

போலீஸ் எஸ்.ஐ கீர்த்திவாசன்
போலீஸ் எஸ்.ஐ கீர்த்திவாசன்

ஆனால் அவருக்கு இதில் தொடர்பில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஐந்து பேர் கொண்ட இளைஞர் கும்பல் தங்கள் நண்பர்களிடம் நகை திருட செல்கிறோம் என்பதை மறைத்து வெளியூருக்கு போவதாகக் கூறி அவர்களிடம் பைக்கை ஓசி வாங்குவார்கள். பின்னர் வேறு ஒரு நண்பர்களிடம் போய் ஹெல்மெட் இல்லாம போனா போலீஸ் பிடிக்கும் எனக் கூறி ஹெல்மெட்டையும் ஓசி வாங்கி போட்டு கொண்டு செல்வார்கள்.போலீஸில் சிக்காமல் இருக்க இதனை கடைப்பிடித்தாக விசாரணையில் தெரிவித்தனர்.

பின்னர் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செயினைப் பறித்து சென்று நகை கடையில் விற்பனை செய்து வந்துள்ளனர். இரண்டு பேர் ஒரு இடத்துக்குச் சென்றால் அடுத்த இரண்டு மாதத்துக்கு அந்த இடத்துக்கு செல்வதை தவிர்த்து விடுவார்கள். தற்போது கும்பகோணம் பகுதியில் கைவரிசை காட்டி வந்தவர்களை கைது செய்திருக்கிறோம். அவர்களுக்கு ரவுடி கும்பலுடன் தொடர்பிருப்பதும் தெரிய வந்திருக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு