Election bannerElection banner
Published:Updated:

சென்னை: பெட்ரோல் விலை உயர்வு; லிஃப்ட் கொடுத்ததற்கு பணம்! -போதை மாணவனால் மேஸ்திரிக்கு நேர்ந்த கொடூரம்

கொலை வழக்கில் கைதான மாணவன் சசிகுமார்
கொலை வழக்கில் கைதான மாணவன் சசிகுமார்

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக அறிமுகம் இல்லாத நபரிடம் டூ வீலரில் லிஃப்ட் கொடுத்ததற்குப் பணம் கேட்டிருக்கிறார் மாணவன். அதனால் ஏற்பட்ட தகராறில் அந்த நபரை மாணவன் கொலை செயய, அந்தக் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை, கொளத்தூர் வளர்மதி நகர் முதலாவது பிரதான சாலையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்துகிடப்பதாக, கொளத்தூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜய் தலைமையிலான போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்து கிடந்தவரின் தலையில் பலத்த காயம் இருந்ததால் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (47) எனத் தெரியவந்தது. அவர், மேஸ்திரியாக கொளத்தூர் பகுதியில் வேலை பார்த்துவந்ததும் தெரிந்தது.

சசிகுமாரின் பைக்
சசிகுமாரின் பைக்

இதையடுத்து மேஸ்திரி சங்கர் எப்படி இறந்தார் என்று போலீஸார் விசாரித்தபோது அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து கொளத்தூர் போலீஸார் கூறுகையில், ``சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் டேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தோம். அப்போது சங்கரும் இளைஞர் ஒருவரும் டூ வீலரில் வரும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் பிறகு பின்னால் அமர்ந்திருந்த சங்கர், பைக்கிலிருந்து கீழே இறங்குகிறார். அப்போது பைக்கை ஓட்டி வந்த இளைஞருக்கும் சங்கருக்கும் வாய்த் தகராறு ஏற்படுகிறது. அதன் பிறகு இளைஞர், சங்கரைத் தாக்கிவிட்டு பைக்கில் செல்கிறார். இளைஞர் ஓட்டி வந்த டூ வீலரின் பதிவு நம்பர் அடிப்படையில் கொளத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சசிகுமார் (19) என்பவரைப் பிடித்து விசாரித்தோம். விசாரணையில் சங்கரைக் கொலை செய்ததை சசிகுமார் ஒப்புக்கொண்டார். அதன்பேரில் சசிகுமாரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். அவரின் பைக்கையும் பறிமுதல் செய்திருக்கிறோம். அவரிடமிருந்து 500 ரூபாயையும் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

கொலை நடந்தது எப்படி என்று போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், ``கடந்த 4-ம் தேதி அதிகாலையில் சசிகுமார் மது அருந்தி விட்டு ரெட்டேரி வழியாக டூ வீலரில் வந்திருக்கிறார். அப்போது திருவண்ணாமலையிலிருந்து கட்டட வேலைக்காக சங்கர் வந்திருக்கிறார். அதிகாலை நேரம் என்பதால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வரவில்லை. அதனால் கொளத்தூருக்குச் செல்ல சாலையில் காத்திருந்திருக்கிறார். இந்தச் சமயத்தில் டூ வீலரில் சசிகுமார் வந்தபோது, லிஃப்ட் கேட்டிருக்கிறார் சங்கர். உடனே அவரை ஏற்றிக்கொண்டு சசிகுமார் கொளத்தூருக்கு வந்திருக்கிறார்.

சென்னை: வீட்டு வாசலில் இளைஞர் கொலை - தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்த ரெளடிக் கும்பல்
கொலை செய்யப்பட்ட சங்கர்
கொலை செய்யப்பட்ட சங்கர்

`வரும் வழியில் பெட்ரோல் விலை அதிகமாகிவிட்டது. அதனால் லிஃப்ட் கொடுத்ததற்குப் பணம் வேண்டும்’ என்று சசிகுமார் கூறியிருக்கிறார். அதற்கு சங்கர், `என்னிடம் பணம் இல்லை’ என்று தெரிவித்திருக்கிறார். அதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த சசிகுமார், சங்கரை அடித்திருக்கிறார். அதில் தலையில் பலத்த காயமடைந்த சங்கர், சம்பவ இடத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். அதன் பிறகு சங்கரின் பையிலிருந்த 1,000 ரூபாயை எடுத்துக்கொண்டு சசிகுமார் தப்பிச் சென்றிருக்கிறார். நீண்டநேரமாக அதே இடத்தில் மயங்கிக்கிடந்த சங்கர், ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிரிழந்திருக்கிறார். சங்கர், ஐடிஐ ஒன்றில் படித்துவருகிறார். பேரவை ஒன்றில் வடசென்னை மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். சங்கரைக் கொலை செய்த குற்றத்துக்காக சசிகுமாரைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றார்.

`விசாரணையின்போது கஞ்சா போதையில் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்' என்று சசிகுமார் போலீஸாரிடம் கெஞ்சியிருக்கிறார். ஆனாலும் போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். சிசிடிவி கேமரா உதவியோடு கொலையை கொளத்தூர் போலீஸார் துப்பு துலக்கியதற்கு உயரதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

கஞ்சா போதை மாணவனை கொலை வழக்கில் சிக்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு