Published:Updated:

ம.பி: மீண்டும் மீண்டும் கடத்தப்பட்ட 13 வயது சிறுமி! -9 பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

பாலியல் வன்கொடுமை (Representational Image)
பாலியல் வன்கொடுமை (Representational Image)

வீட்டுக்கு வந்த சிறுமியிடம் அவரின் தாய் விசாரிக்கவே, சிறுமிக்கு நடந்த வன்கொடுமை அத்தனையும் சிறுமியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சிறுமியின் தாயார், ஜனவரி 14 - ம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 13 வயது சிறுமி இரண்டு முறை கடத்தப்பட்டு, ஒன்பது பேரால் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த ஒன்பது பேரில் ஏழு பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

சிவ்ராஜ் சிங் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் 15 நாள் 'சம்மான்' (Samman) பிரசாரத்தை நடத்திவரும் நேரத்தில், இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியபிரதேசத்திலுள்ள உமேரியா (Umaria) நகரிலுள்ள சந்தை ஒன்றிலிருந்து கடந்த 4-ம் தேதி, 13 வயது சிறுமி, தெரிந்தவர் ஒருவரால் கடத்தபட்டார். அந்த நபர் நகருக்கு வெளியே ஆள் அரவமற்ற இடத்துக்குச் சிறுமியை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அந்த நபருடன் மேலும் ஆறு பேர் சேர்ந்து அச்சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

அதன் பிறகு அடுத்த நாள் (ஜனவரி 5-ம் தேதி) அந்தக் கொடூரர்களால் சிறுமி விடுவிக்கபட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும், கொடூரக்காரர்களால் மிகவும் மோசமாக தாக்கப்பட்ட அந்தச் சிறுமியிடம், `வெளியில் யாரிடமும் இதைப் பற்றிக் கூறக் கூடாது’ என்று மிரட்டியும் இருக்கிறார்கள் என்றார். இதனால் பயந்துபோன சிறுமி, யாரிடமும் இதைப் பற்றித் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார்.

அதன் பிறகு ஆறு நாள்கள் கழித்து, அதாவது ஜனவரி 11 -ம் தேதி ஏற்கெனவே வன்கொடுமை செய்த ஆறு பேரில் ஒருவனால் மீண்டும் கடத்தப்பட்டார் சிறுமி. அங்கு முன்னர் வன்கொடுமை செய்த மூன்று பேருடன் லாரி ஓட்டுநர் ஒருவர் என ஐந்து பேரால் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து சாலையோர உணவகத்திலிருந்த மூன்று லாரி ஓட்டுநர்களால் மீண்டும் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, அங்கிருந்து தப்பித்து, தன் குடும்பத்திடம் வந்து சேர்ந்தார்.

இதற்கிடையில், சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் காணாமல்போன சிறுமியை பற்றி காவல்துறையில் ஜனவரி 11 அன்று புகார் செய்துள்ளனர்.

பாலியல் கொடூரம்..
பாலியல் கொடூரம்..

அதன் பின்னர் வீட்டுக்கு வந்த சிறுமியிடம் அவரின் தாய் விசாரிக்கவே, சிறுமிக்கு நடந்த வன்கொடுமை அத்தனையும் சிறுமியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் ஜனவரி 14 -ம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருவதாகவும், குற்றம்சட்டப்பட்டவர்களில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் மற்றவர்களைத் தேடுவதாகவும் காவல்துறையினர் கூறினர்.

மேலும், கோட்வாலி காவல்துறையினர் குற்றம்சட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 366 (ஏ) உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் அரவிந்த் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு