Published:Updated:

பட்டாக்கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்! -மதுரையில் சிறுவர்கள் உட்பட 5 நபர்கள் கைது

பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் காட்சி
பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் காட்சி

மதுரையில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மூன்று சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டாக்கத்தியில் கேக் வெட்டும் தவறான கலாசாரம் பல்வேறு இடங்களில் மேலோங்கி வருகிறது. ரவுகள் மற்றும் கடத்தல் கேங்குகள் தங்களைப் பெருமைப்படுத்திக்கொள்ள பட்டாக் கத்தியில் கேக் வெட்டுவதும், அதை வாட்ஸ் அப், முகநூல்களில் பதிவு செய்துகொள்வதும் என அச்சுறுத்தலில் ஈடுபடுகின்றனர்.

கேக்
கேக்

இதனால் இதை ஃபேஷனாக எடுத்துக்கொள்ளும் சிறுவர்களும் இதைப் பின்பற்றி கேக்குகளை வெட்டுகின்றனர். மேலும் சில மீம் கிரியேட்டர்கள் மதுரைக்காரங்க என்றால் ஆயுதங்களுடன்தான் இருக்க வேண்டும் என்பது போல தோற்றத்தை உருவாக்குகின்றனர். வன்முறையைத் தூண்டும் காட்சிகளைப் பதிவு செய்து தங்கள் முகநூல் பக்கங்களுக்கு லைக்குகளைத் தேடிக்கொள்கின்றனர்.

இந்நிலையில் மதுரை விரகனூர் பகுதியைச் சேர்ந்த, சிவா என்ற குரங்கு சிவா என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் கல்மேடு பகுதியில், அவர் நண்பர்கள் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். குரங்கு சிவா பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கு சிவா
குரங்கு சிவா

இந்நிலையில் இவரது பிறந்தநாளில் பட்டா கத்தியைப் பயன்படுத்தி குரங்கு சிவா கேக் வெட்டிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவின. அதைத் தொடர்ந்து இந்த வீடியோ தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிலைமான் காவல்துறையினர் வீடியோவில் உள்ள அனைவரையும் தேடிவந்தனர். நேற்றிரவு குரங்கு சிவா அவருடைய நண்பர் காஞ்சிவனம் மற்றும் 3 சிறார்கள் உட்பட 5 பேரை சிலைமான் காவல்துறையினர் கைது செய்தனர். நள்ளிரவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மூன்று சிறார்களை கூர்நோக்குப் பள்ளிக்கும், மற்ற இருவரை சிறைக்கும் அழைத்துச்சென்றனர்.

தங்களை ரவுடியாகக் காட்டிக்கொள்ள கத்தி மற்றும் அரிவாளுடன் புகைப்படம் வீடியோ, எடுத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வன்முறைகளைத் தூண்டும் நபர்களைக் கண்டறிந்து காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேக் வெட்டிய காட்சி
கேக் வெட்டிய காட்சி

`டிஜிட்டல் வளர்ச்சியை நாம் சரியாகப் பயன்படுத்தும்போது சரியான பாதைக்குச் செல்லாம். ஆனால், இவ்வாறு தவறான செயல்களில் ஈடுபட்டால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும்' எனக் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு