மகாராஷ்டிராவின் விதர்பா, மராத்வாடா பகுதிகளில் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், இரு சகோதரர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தில் இருக்கும் மைசால் என்ற கிராமத்தில் வசித்தவர்கள் போபட் எல்லப்பா, மானிக் எல்லப்பா. சகோதரர்களான இவர்கள் தங்கள் குடும்பத்தோடு வசித்துவந்தனர். இதில் போபட் எல்லப்பா கால்நடை மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இன்று காலையிலிருந்து இருவரது வீடுகளும் திறக்கப்படாமல் பூட்டியே இருந்திருக்கின்றன. நீண்ட நேரத்துக்குப் பிறகு பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவைத் தட்டியபோது கதவு உள்பக்கமாக அடைக்கப்பட்டிருந்தது.

கதவை உடைத்துப் பார்த்தபோது மானிக் எல்லப்பா வீட்டில் 6 பேரும், போபட் எல்லப்பா வீட்டில் 3 பேரும் இறந்து கிடந்தனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் உயர் அதிகாரிகளுடன் விரைந்துவந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அனைவரும் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும் என போலீஸார் கருதுகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்த போது இரு குடும்பமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தது தெரியவந்தது. அதோடு அவர்கள் கிராமத்தில் பலரிடம் கடன் பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டு சித்ரவதை செய்ததால்தான் சகோதரர்கள் இருவரும் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து கடன் கொடுத்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.