Published:Updated:

குடிபோதையில் துன்புறுத்திய கணவன்; கொன்று கிணற்றில் வீசிய பெண்; மன்னார்குடியில் அதிர்ச்சி சம்பவம்!

கிணறு
கிணறு

பாண்டியன் இதே பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் கை கால்கள் கட்டப்பட்டு காயங்களுடன் சடலமாகக் கிடந்திருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டையில், குடிபோதையில் அடித்துத் துன்புறுத்திய கணவரைக் கொன்று கிணற்றில் வீசிய பெண், காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக, இந்தப் பெண்ணின் தந்தையும் கைதுசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி
மன்னார்குடி

பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர், பெயின்டராக வேலை செய்துவந்தார். இவரின் மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் திடீரென காணாமல்போனார். இரண்டு நாள்கள் கடந்தநிலையில், 19ம் தேதி பாண்டியன் இதே பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் கை கால்கள் கட்டப்பட்டு காயங்களுடன் சடலமாகக் கிடந்திருக்கிறார். இது குறித்து பரவாக்கோட்டை காவல்துறையினருக்கு, ஊர் மக்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, காவல்துறையினரின் முன்னிலையில் மன்னார்குடி தீயணைப்பு வீரர்கள் கிணற்றிலிருந்து பாண்டியனின் உடலை மீட்டனர். பின்னர் பாண்டியனின் உடல், பிரேத பரிசோதனைக்காக, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். பெயின்ட்டர் பாண்டியனை அவரின் மனைவி மகேஸ்வரி, தனது தந்தை கோவிந்தராஜுடன் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மகேஸ்வரியையும் அவரின் தந்தை கோவிந்தராஜையும் போலீஸார் கைதுசெய்தனர். இது குறித்து பரவாக்கோட்டை காவல்துறையினர் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்டுள்ள மகேஸ்வரி, தான் அளித்துள்ள வாக்குமூலத்தில், அவருடைய கணவர் பாண்டியன், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மதுபோதையில் தன்னையும், மகன்களையும் அடித்துத் துன்புறுத்திவந்தார். இதனால் தன் தந்தையுடன் சேர்ந்து, பாண்டியனைக் கட்டையால் அடித்துக் கொன்று உடலைக் கிணற்றில் வீசியதாக மகேஸ்வரி தெரிவித்தார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு