Published:Updated:

மும்பையில் மேலும் ஒரு தடுப்பூசி முகாம் மோசடி?! - பாலிவுட் இயக்குநர் வேதனை

ரமேஷ் தெளரானி
ரமேஷ் தெளரானி

பாலிவுட் இயக்குநர் தனது ஊழியர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த கொரோனா தடுப்பூசி முகாமிலும் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் 1:

மும்பையில் கொரோனா தடுப்பூசி முகாம்களைத் தனியார் நிறுவனங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் தங்களது கம்பெனி வளாகத்திலேயே ஏற்பாடு செய்துவருகின்றனர். அது போன்ற ஒரு முகாம், மும்பை காந்திவலியிலுள்ள குடியிருப்புக் கட்டடத்தில், தனியார் மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 390 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆனால் தடுப்பூசி போட்ட பிறகு வழக்கமாக வரக்கூடிய பக்கவிளைவுகள் எதுவும் வரவில்லை. அதோடு சான்றிதழில் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு மருத்துவமனையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சென்று விசாரித்தபோது `நாங்கள் அது போன்ற ஒரு முகாமுக்கு ஏற்பாடு செய்யவே இல்லை’ என்று தெரிவித்துவிட்டனர். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர். இந்த மோசடி தொடர்பாக நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

தற்போது இந்த மோசடியில் பாலிவுட் இயக்குநர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் ரமேஷ் தெளரானி தனது கம்பெனியில் பணியாற்றும் ஊழியர்கள் 365 பேருக்கு மே மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்திருந்தார். சஞ்சய் குப்தா என்பவர் இந்த முகாமை நடத்தினார். ஒருவருக்கு ரூ.1,200 வாங்கினார். ஆனால் 15 நாள்களுக்கும் அதிகமான நிலையில் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சான்றிதழ் வரவில்லை. சஞ்சய் குப்தாவை ரமேஷ் தொடர்புகொண்டு கேட்டதற்கு 12-ம் தேதி சான்றிதழ் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் இன்னும் சான்றிதழ் வரவில்லை. இது குறித்து ரமேஷ் தெளரானி கூறுகையில், ``தடுப்பூசிக்கான சான்றிதழ் திருபாய் அம்பானி மருத்துவமனையிலிருந்து கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. தடுப்பூசி போட்டார்களா அல்லது வெறும் குளூக்கோஸ் தண்ணீரைச் செலுத்தினார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். தடுப்பூசியில் மோசடி நடப்பதால், தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை நடத்துவதில் தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளன.

க்ரைம்
க்ரைம்
மாதிரி புகைப்படம்

சம்பவம் 2:

இதற்கிடையே மும்பையில் கொரோனாவால் வேலை வாய்ப்புகளை இழந்த இரண்டு டி.வி நடிகைகள் திருட்டில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுரபி சுரேந்திரா (25), மோஷினா (19) ஆகியோர் டி.வி நிகழ்ச்சிகளில் சிறு சிறு வேடங்களில் நடித்துவருகின்றனர். கொரோனாவால் வேலை இல்லாமல் ஏற்கெனவே இருந்த வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாமல் வீட்டைக் காலி செய்துவிட்டு கோரேகாவிலுள்ள ஒரு வீட்டில் பணம் கொடுத்து கெஸ்ட்டாகத் தங்குபவர்களாகச் சேர்ந்துகொண்டனர்.

மும்பை: அடுக்குமாடிக் குடியிருப்பில் போலி தடுப்பூசி முகாம்?; அதிரவைக்கும் மோசடி! - நடந்தது என்ன?

அவர்களுடன் ஏற்கெனவே வேறு ஒரு பெண்ணும் வாடகைக்குத் தங்கியிருந்தார். அந்தப் பெண் தனது லாக்கரில் ரூ.3.28 லட்சம் வைத்திருந்தார். அந்தப் பணத்தை மோஷினா, சுரேந்திரா இருவரும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் பணத்துடன் செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரித்த்போது பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டனர். கொரோனாவால் வேலை போனதால், இது போன்று நடந்துகொண்டதாக போலீஸாரிடம் தெரிவித்தனர். இருவரிடமிருந்து திருட்டுப் பணம் ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 23-ம் தேதி வரை போலீஸ் காவலில்வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது. இருவரும் க்ரைம் பெட்ரோல், சாவ்தான் இந்தியா போன்ற டி.வி நிகழ்ச்சிகளில் நடித்திருப்பதோடு வெப் சீரியல்களிலும் அதிக அளவில் நடித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு